சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் ரூ.1 லட்சம் பறித்த 2 பேர் கைது
வில்லே பார்லேவில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் ரூ.1 லட்சம் பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களை போக்குவரத்து போலீசார் விரட்டி பிடித்தனர்.
மும்பை,
மும்பையை சேர்ந்தவர் ரேகா. இவர் மருத்துவ பரிசோதனைக்காக வில்லே பார்லேயில் உள்ள கூப்பர் ஆஸ்பத்திரிக்கு உறவினருடன் அங்குள்ள சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த வாலிபர் ஒருவர் திடீரென ரேகாவின் கையில் இருந்த கைப்பை பறித்து கொண்டு ஓடினார்.
அதில் ரூ.1 லட்சம் ரொக்கம் இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ரேகாவும், அவரது உறவினரும் திருடன்...திருடன்...என உதவி கேட்டு சத்தம் போட்டபடி அவரை பிடிப்பதற்காக துரத்தி சென்றனர்.
இந்த நிலையில், அந்த வாலிபர் ஒரு ஆட்டோவில் தப்பி சென்றார். ரேகாவின் சத்தம் கேட்டதும் அங்கு பணியில் இருந்த போக்குவரத்து போலீசார் 2 பேர் அந்த ஆட்டோவை தங்களது மோட்டார்சைக்கிளில் சுமார் 1 கி.மீ. தூரம் விரட்டி சென்று ஆட்டோவை மடக்கினர்.
பணம் பறித்த வாலிபர் மற்றும் டிரைவர் இருவரையும் பிடித்து ஜூகு போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தினார்கள். இதில் அவர்களது பெயர் முகமது ஹக்கு( 32), சமிமுல்லா சேக் (65) என்பது தெரியவந்தது.
போலீசார் அவர்களிடம் இருந்த ரேகாவின் பணத்தை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story