குரங்கு நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகள் செல்ல தடை


குரங்கு நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகள் செல்ல தடை
x
தினத்தந்தி 27 July 2019 3:45 AM IST (Updated: 27 July 2019 5:53 AM IST)
t-max-icont-min-icon

குரங்கு நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொள்ளாச்சி,

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பொள்ளாச்சி அருகே குரங்கு நீர்வீழ்ச்சி உள்ளது. இந்த நீர்வீழ்ச்சிக்கு வால்பாறை சக்தி எஸ்டேட் மற்றும் வனப்பகுதியில் உற்பத்தியாகும் நீரோடைகள் மூலம் தண்ணீர் வருகிறது. இந்த நிலையில் கடந்த ஆண்டு பெய்த தென்மேற்கு பருவமழைக்கு பிறகு, வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்தபடி பெய்யவில்லை. இதனால் நீர்வீழ்ச்சிக்கு வரும் நீர்வரத்து குறைந்தது. கடந்த மார்ச் மாதம் நீர்வரத்து முற்றிலும் குறைந்து பாறைகளாக காட்சி அளித்தது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வனப்பகுதியில் தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டுகிறது. இதனால் கடந்த 20-ந்தேதி முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் குரங்கு நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், நேற்று சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனால் ஆழியாறுக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். இதுகுறித்து வனச்சரகர் காசிலிங்கம் கூறியதாவது:-

பருவமழையின் காரணமாக குரங்கு நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டியதால் 3 மாதத்திற்கு பிறகு கடந்த 20-ந்தேதி முதல் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் இன்று (நேற்று) வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் சுற்றுலா பயணிகள் அத்துமீறி செல்வதை தடுக்க வனத்துறையினர் கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

தற்போது வனப்பகுதியில் மழை பெய்து வருவதால் வால்பாறை மலைப்பாதையில் ஆங்காங்கே சிற்றருவிகள் உருவாகி தண்ணீர் கொட்டுகிறது. சுற்றுலா பயணிகள் மலைப்பாதையில் வாகனங்களை நிறுத்தவோ, சிற்றருவிகளில் குளிக்கவோ கூடாது. அத்துமீறி செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நாளை (இன்று) நீர்வீழ்ச்சிக்கு வரும் நீர்வரத்தை பொறுத்து, சுற்றுலா பயணிகள் அனுமதிப்பது குறித்து முடிவு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story