ஆடி அமாவாசை அன்று புனித நீராட வசதியாக முக்கடல் சங்கமத்தில் உள்ள பாறைகளை அகற்ற வேண்டும் பக்தர்கள் வலியுறுத்தல்


ஆடி அமாவாசை அன்று புனித நீராட வசதியாக முக்கடல் சங்கமத்தில் உள்ள பாறைகளை அகற்ற வேண்டும் பக்தர்கள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 27 July 2019 10:30 PM GMT (Updated: 27 July 2019 2:52 PM GMT)

ஆடி அமாவாசை அன்று புனித நீராட வசதியாக கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் உள்ள பாறைகளை அகற்ற வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கன்னியாகுமரி,

இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ள கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் வந்து புனித நீராடி செல்கிறார்கள். கோவில் கும்பாபிஷேகம் மற்றும் திருவிழாக்களுக்கு இந்த முக்கடல் சங்கமத்தில் இருந்துதான் புனித நீர் எடுத்துச் செல்லப்படுகிறது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த முக்கடல் சங்கமிக்கும் இடம் தற்போது பக்தர்கள் புனித நீராட முடியாத அளவுக்கு காணப்படுகிறது. சுனாமியால் சேதமடைந்த கட்டிடங்களின் கற்களும், பாறாங்கற்களும் இங்கு குவிந்து கிடக்கின்றன. சுனாமி தாக்குதல் முடிந்து 15 ஆண்டுகள் ஆன பின்பும் ராட்சத பாறாங்கற்கள் இதுவரை அகற்றப்படவில்லை. இதனால் சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் முக்கடல் சங்கமத்தில் புனித நீராட முடியாத அவலநிலை ஏற்பட்டு உள்ளது.

ஆடி அமாவாசை


மேலும் ஆடி அமாவாசை, தை அமாவாசை போன்ற விசே‌ஷ நாட்களில் தங்களது முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் செய்வதற்காக கன்னியாகுமரி கடலில் புனித நீராட ஏராளமான பக்தர்கள் வருவார்கள். கடலில் ராட்சத பாறாங்கற்கள் குவிந்து கிடப்பதால் புனித நீராடும் பக்தர்கள் ரத்த காயங்களுடன் திரும்பும் பரிதாப நிலை ஏற்படுகிறது. மேலும், கன்னியாகுமரியில் புதிதாக அமைக்கப்பட்ட அலைத் தடுப்புச்சுவரினால் நீண்ட நெடிய பரந்து விரிந்து காணப்பட்ட கடற்கரை மணல்பரப்பே இல்லாமல் காணாமல் போய்விட்டது. இதனால் கடல் நீர்பிடிப்பு பகுதி குறைந்து பாறைகளும் மணல் திட்டுகளுமாக காட்சியளிக்கிறது.

அகற்ற வேண்டும்


இதனால் கடந்த சில ஆண்டுகளாக ஆடி அமாவாசை, தை அமாவாசை போன்ற விசே‌ஷ நாட்களில் புனித நீராட வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்த வண்ணமாக உள்ளது. எனவே வருகிற 31–ந் தேதி ஆடி அமாவாசை அன்று புனித நீராடும் பக்தர்களுக்கு ரத்தகாயம் ஏற்படுவதை தடுக்க கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் குவிந்து கிடக்கும் ராட்சத பாறாங்கற்களை அகற்ற வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர்.


Next Story