அடிப்படை வசதிகள் இல்லை என புகார்: மாத்தூர் தொட்டி பாலத்தில் அதிகாரிகள் குழு ஆய்வு


அடிப்படை வசதிகள் இல்லை என புகார்: மாத்தூர் தொட்டி பாலத்தில் அதிகாரிகள் குழு ஆய்வு
x
தினத்தந்தி 27 July 2019 11:00 PM GMT (Updated: 27 July 2019 3:19 PM GMT)

மாத்தூர் தொட்டி பாலத்தில் அடிப்படை வசதிகள் இல்லை என புகார் எழுந்ததையடுத்து அதிகாரிகள் குழுவினர் திடீரென ஆய்வு செய்தனர்.

திருவட்டார்,

திருவட்டார் அருகே மாத்தூரில், ஆசியாவிலேயே மிக உயரமான தொட்டி பாலம் உள்ளது. இங்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லை என புகார் கூறப்பட்டு வந்தது.

குறிப்பாக பாலத்தின் ஒரு பகுதி அருவிக்கரை ஊராட்சியின் கட்டுப்பாட்டிலும், மற்றொரு பகுதி வேர்கிளம்பி பேரூராட்சி கட்டுப்பாட்டிலும் உள்ளது. வேர்கிளம்பி பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதியில் உள்ள பூங்கா பராமரிப்பு இன்றியும், விளையாட்டு உபகரணங்கள் பழுதடைந்து உள்ளன. இவற்றை சரி செய்ய கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதிகாரிகளால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.


இந்தநிலையில், மாத்தூர் தொட்டிப்பாலத்திற்கு சமீபத்தில் சென்ற பத்மநாபபுரம் உதவி கலெக்டர் சரண்யா அரி, பூங்கா பராமரிப்பு இன்றி கிடப்பதை பார்வையிட்டார். அத்துடன் இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கண்ணனுக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து, பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கண்ணன் நேற்று மாத்தூர் தொட்டிப்பாலத்தில் ஆய்வு மேற்கொண்டார். அவருடன் வேர்கிளம்பி, திருவட்டார், ஆற்றூர், குமாரபுரம் பேரூராட்சி செயல் அலுவலர்கள் ஜெயராஜ், ஜோஸ்பின் ராஜ், சுப்பிரமணியம், திருமலைகுமார் மற்றும் வேர்கிளம்பி பேரூராட்சி முன்னாள் தலைவர் மவுண்ட்மேரி மனோகரன் ஆகியோர் உடனிருந்தனர்.

அதிகாரிகள் குழுவினர் மாத்தூர் தொட்டி பாலம் பகுதியை சுற்றிபார்த்து அங்கு மேற்கொள்ள வேண்டிய சீரமைப்பு பணிகள் குறித்து ஆலோசித்தனர். மேலும், பேரூராட்சி ஊழியர்கள் மூலம் சிறுவர் பூங்கா சீரமைக்கப்பட்டது.

Next Story