வெவ்வேறு இடங்களில் விவசாயி உள்பட 3 பேர் தற்கொலை


வெவ்வேறு இடங்களில் விவசாயி உள்பட 3 பேர் தற்கொலை
x
தினத்தந்தி 28 July 2019 3:30 AM IST (Updated: 28 July 2019 1:20 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் விவசாயி உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

ராயக்கோட்டை,

ராயக்கோட்டை அருகே உள்ள கொப்பகரையை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 60). விவசாயி. மனநலம் பாதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் இவர் தவறுதலாக எலிக்கு வைக்க கூடிய விஷத்தை எடுத்து தின்று விட்டார். இதில் மயக்கம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ராயக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

பிறகு மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட லட்சுமணன் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். இது குறித்து ராயக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

காவேரிப்பட்டணம் அருகே உள்ள சுருளிஹள்ளியை சேர்ந்தவர் பிரசாந்த் (22). கட்டிட தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. சம்பவத்தன்று இவரது மோட்டார்சைக்கிள் தீப்பிடித்து எரிந்தது. இது குறித்து அவரது பெற்றோர் பிரசாந்திடம் கேட்டனர். இது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையில் மனம் உடைந்த பிரசாந்த் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து காவேரிப்பட்டணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

ஓசூர் சாந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் கிருபாகரன் (19). டிப்ளமோ படித்துள்ளார். அவர் வேலைக்கு எதுவும் செல்லாமல் இருந்து வந்தார். இது தொடர்பாக மன வருத்தத்தில் இருந்த கிருபாகரன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஓசூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story