பொன்னமராவதி அருகே மகனை கொன்று தாய் தற்கொலை


பொன்னமராவதி அருகே மகனை கொன்று தாய் தற்கொலை
x
தினத்தந்தி 28 July 2019 3:45 AM IST (Updated: 28 July 2019 1:33 AM IST)
t-max-icont-min-icon

பொன்னமராவதி அருகே மனநலம் பாதித்த மகனுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு, தாய் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பொன்னமராவதி,

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள காரையூர் பகுதியை சேர்ந்தவர் சேனா என்ற பெருமாள் (வயது 44). இன்னிசைக்கச்சேரி பாடகரான இவரது மனைவி தவமணி (வயது 40). இவர்களுக்கு ஸ்ரீராம் (24), மணிகண்டன் (15) என்ற 2 மகன்களும், சுருளி என்ற மகளும் இருந்தனர். இதில் ஸ்ரீராம் பிறந்ததில் இருந்து கை, கால்கள் செயல்படாமலும், மனநலம் பாதிக்கப்பட்டும் இருந்துள்ளார். சுருளிக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் தவமணிக்கும், பெருமாளுக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த தவமணி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து உள்ளார். அப்போது தான் இறந்த பிறகு, மகன் ஸ்ரீராமை யார் பராமரிப்பார்கள் என எண்ணி, அவரை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொள்ள தவமணி முடிவு செய்து உள்ளார்.

தாய்-மகன் சாவு

இதையடுத்து வீட்டில் யாரும் இல்லாதபோது பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) ஸ்ரீராமுக்கு கொடுத்துவிட்டு, தவமணியும் குடித்து உள்ளார். பின்னர் சிறிது நேரத்தில் 2 பேரும் மயங்கி விழுந்தனர். இதைக்கண்ட அக்கம், பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் தவமணி, ஸ்ரீராம் ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக பொன்னமராவதி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே தவமணி, ஸ்ரீராம் ஆகியோர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இதையடுத்து அவர்களது உறவினர்கள் 2 பேரின் உடல்களையும் காரையூருக்கு கொண்டுவந்து, இறுதி சடங்குகளை செய்து, சுடுகாட்டில் புதைத்தனர். தற்கொலை செய்து கொண்ட தவமணி ஏற்கனவே 2 முறை தற்கொலை முயற்சி செய்ததாகவும், அப்போது அவரை மீட்டு உறவினர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றியதாகவும் கூறப்படுகிறது. காரையூரில் மனநலம் பாதிக்கப்பட்ட மகனை விஷம் கொடுத்து கொலை செய்து விட்டு, தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story