மின்வாரியத்தில் காலியாக உள்ள களப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் தொழிலாளர் ,பொறியாளர் ஐக்கிய சங்கத்தில் தீர்மானம்


மின்வாரியத்தில் காலியாக உள்ள களப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் தொழிலாளர் ,பொறியாளர் ஐக்கிய சங்கத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 29 July 2019 4:30 AM IST (Updated: 29 July 2019 12:49 AM IST)
t-max-icont-min-icon

மின்வாரியத்தில் காலியாக உள்ள களப்பணியிடங்களை ஐ.டி.ஐ. படித்தவரை கொண்டு நிரப்ப வேண்டும் என்று மின்சார வாரிய தொழிலாளர், பொறியாளர் ஐக்கிய சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பெரம்பலூர்,

தமிழ்நாடு மின்சார வாரிய தொழிலாளர், பொறியாளர் ஐக்கிய சங்கத்தின் பெரம்பலூர் வட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு சங்கத்தின் வட்டத் தலைவர் பழனிவேல் தலைமை தாங்கினார். வட்ட துணைத் தலைவர் அன்பழகன், மகளிரணி செயலாளர் செல்வி உள்பட பலர் முன்னிலை வகித்தனர். வட்ட செயலாளர் சின்னசாமி சங்கத்தின் ஆண்டறிக்கையை வாசித்தார். பொருளாளர் சங்கர் சங்கத்தின் வரவு-செலவு கணக்குகளை தாக்கல் செய்தார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக சங்கத்தின் பொதுச் செயலாளர் சுப்பிரமணியன், மாநில தலைவர் கண்ணன், செயலாளர் முத்துசாமி, பொருளாளர் ஜெயப்பிரகாஷ், அமைப்பு செயலாளர் வீராசாமி, மகளிரணி செயலாளர் திவ்யா, இளைஞர் அணி செயலாளர் கருப்புசாமி உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.

மின்வாரியத்தில் வணிக உதவியாளர் பதவியில் உள்ள மூத்த பணியாளர்களுக்கு உபரி வணிக ஆய்வாளர் பதவி களை அளிக்க வேண்டும். 2009-ல் பணியேற்பு செய்தவர்களின் பயிற்சி காலம் ரத்து செய்து பெறப்பட்ட நீதிமன்ற உத்தரவுபடி உடன் பயிற்சி காலத்திற்கான ஊதியம் மற்றும் ஆண்டு உயர்வுக்கான பணப்பலன்களை பெற்று தர வேண்டும். மின்வாரியத்தில் காலியாக உள்ள களப்பணியிடங்களை ஐ.டி.ஐ. படித்தவரை கொண்டு உடனடியாக அரசு நிரப்ப வேண்டும்.

தவிர்க்க வேண்டும்

விழிப்பு பணி தலையீடு காரணம் காட்டி தேவையற்ற காரணங்களில் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்வதனை தவிர்க்க வேண்டும். அரியலூர் மற்றும் பெரம்பலூர் மின்பகிர்மான கோட்டங்களை பிரித்து கூடுதல் 2 கோட்டங்கள் அமைக்க வேண்டும். மின்வாரியம் தொடர்ந்து பொதுத்துறை நிறுவனங்களாக செயல்பட வேண்டும். பழைய ஓய்வூதியம் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதனை தொடர்ந்து சங்கத்தின் பெரம்பலூர் வட்ட பொதுக்குழு மற்றும் பொறுப்பாளர்கள் தேர்வுக்கான தேர்தல் நடைபெற்று புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கூட்டத்தில் சங்கத்தின் வட்ட, கோட்ட, உபகோட்ட பொறுப்பாளர்கள் மற்றும் வட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக சங்கத்தின் வட்ட துணைத் தலைவர் முருகானந்தம் வரவேற்றார். முடிவில் பெரம்பலூர் கோட்ட தலைவர் ரமேஷ் நன்றி கூறினார்.

Next Story