வணிக முன்னேற்றத்துக்கு உதவ புதிய சட்டங்களை அரசு உருவாக்க வேண்டும்


வணிக முன்னேற்றத்துக்கு உதவ புதிய சட்டங்களை அரசு உருவாக்க வேண்டும்
x
தினத்தந்தி 29 July 2019 4:30 AM IST (Updated: 29 July 2019 1:51 AM IST)
t-max-icont-min-icon

வணிக முன்னேற்றத்துக்கு உதவிட புதிய சட்டங்களை அரசு உருவாக்கிட வேண்டும் என்று திருச்சியில் நடந்த ‘ஸ்மார்ட்’ வினியோகஸ்தர்கள் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருச்சி,

தமிழ்நாடு நுகர்பொருள் வினியோகஸ்தர்கள் சங்கத்தின் 13-வது ‘ஸ்மார்ட்’ வினியோகஸ்தர்கள் மாநாடு திருச்சி காட்டூர் சிங்காரம் மஹாலில் நேற்று நடந்தது. மாநாட்டுக்கு மாநில நிறுவன தலைவர் பி.எம்.கணேஷ்ராம் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் எஸ்.ராஜசேகர் முன்னிலை வகித்தார். பத்மாவதி குத்துவிளக்கேற்றிவைத்தார். தமிழகம் முழுவதும் வந்திருந்த முக்கிய நிர்வாகிகள் மாநாட்டில் தங்களது வியாபார அனுபவங்களை எடுத்து கூறினர். மாநாட்டில் நிறுவன தலைவர் கணேஷ்ராம் பேசியதாவது:-

மாநாட்டின் நோக்கம் என்ன?

தற்போது இருக்கிற நுகர்பொருள் வினியோகஸ்தர்கள் நல்ல லாபகரமாக தொழில் செய்திட வேண்டும். புதிய வினியோகஸ்தர்கள் நல்ல முறையில் பயிற்சி எடுத்து, இதே தொழில் பல வருடங்கள் நிலைத்திருப்பதற்கு ஆயத்தமாக வேண்டும் என்றால், நமது சங்கத்தினுடைய ‘வினியோகஸ்தர்கள் டிரைனிங் அகாடமியானது வினியோகஸ்தர்கள் டிரைனிங் அண்ட் சேல்ஸ்மென் டிரைனிங் அகாடமி’யாக உருவாக்குவதற்கு முயற்சி எடுத்து வருகிறேன். அதற்காக அனைத்து நிறுவனங்களின் ஒத்துழைப்பை கேட்டுக்கொள்கிறேன். நேர்மையான வழிமுறைகளாக இருந்தால் நிச்சயம் நல்லோர் பலர் நமக்கு உறுதுணையாக இருப்பார்கள். நாம் எல்லோரும் லாபகரமான பாதையில் போக வேண்டும் என்ற கனவுதான் தமிழ்நாடு நுகர்பொருள் வினியோகஸ்தர்கள் சங்கத்தின் நோக்கம்.

உங்கள் பையன் நன்றாக படித்திருக்கலாம். ஒரு கம்பெனியில் வேலைக்கு சென்றால் ரூ.1 லட்சம்தான் சம்பளம் கிடைக்கும். ஆனால், எனது டிஸ்ட்ரிபுசனில் ரூ.5 லட்சம் கிடைக்கும். எது வேண்டும் என்பதே இதில் நீயே முடிவு செய்துகொள். உங்கள் தொழிலை மனைவி குறை சொல்லாத அளவுக்கு சிறந்த வணிகமாக, லாபகரமான தொழிலாக மாற்ற வேண்டும் என்பதே ஸ்மார்ட் வினியோகஸ்தர்கள் சங்க மாநாட்டின் நோக்கம். இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து சிறந்த வினியோகஸ்தர்கள் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டு பாராட்டப்பட்டனர். மாநாட்டில் கணேஷ்ராமுக்கு ஆளுயர மாலை, தலையில் கிரீடம் அணிவிக்கப்பட்டு, ‘வினியோகஸ்தர்களின் விடிவெள்ளி’ என்ற பட்டம் வழங்கப்பட்டது. மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:-

மோடிக்கு பாராட்டு

வணிகர்களுக்கு ஓய்வூதிய திட்டத்தை அறிவித்த பிரதமர் நரேந்திரமோடிக்கும், மத்திய அரசுக்கும் பாராட்டும், நன்றியும் மாநாடு தெரிவித்து கொள்கிறது. இ-காமர்ஸ் வணிகம் தேவையான கட்டுப்பாட்டுடன், இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்கும் சிறு குறு வணிகர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வண்ணம் இயங்கிட வேண்டும். அனைத்து தயாரிப்பு நிறுவனங்களும் தற்போது வினியோகிஸ்தர்களுக்கு வழங்கி வரும் கமிஷனை 2 சதவீதம் அதிகரிக்க வேண்டும்.

வினியோகஸ்தர்கள் மற்றும் தயாரிப்பு நிறுவனங்கள் ஏகமனதாக ‘ஸ்மூத் செபரேஷன் சர்டிபிகேட்’ (மென்மையான பிரிப்பு சான்றிதழ்) வழிமுறையை கையாள வேண்டும்.

புதிய சட்டம்

சீன தயாரிப்பு நிறுவன வணிகம் இந்தியாவில் நுழைவதால் இந்திய பொருளாதாரம் வீழ்ச்சி அடைகிறது. எனவே, இந்திய தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். பழைய அவசியமற்ற வணிக சட்டங்களை ரத்து செய்து வணிக முன்னேற்றத்திற்கு உதவும் புதிய சட்டங்களை உடனடியாக உருவாக்கி வணிகத்தை வளர்ச்சி பாதையில் செல்ல உதவிட வேண்டும்.

மேற்கண்ட தீர்மானங்கள் உள்பட 10 அம்ச தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Next Story