‘ஆன்-லைன்’ வர்த்தகத்தில் பணத்தை முதலீடு செய்து ஏமாற வேண்டாம் பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை


‘ஆன்-லைன்’ வர்த்தகத்தில் பணத்தை முதலீடு செய்து ஏமாற வேண்டாம் பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 29 July 2019 3:45 AM IST (Updated: 29 July 2019 2:10 AM IST)
t-max-icont-min-icon

‘ஆன்-லைன்’ வர்த்தகத்தில் பணத்தை முதலீடு செய்து ஏமாற வேண்டாம் என பொதுமக்களுக்கு திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருச்சி,

திருச்சி மாநகரில் உள்ள பல இடங்களில் ஆன்-லைன் டிரேடிங் என்ற பெயரில் ஒரு கும்பல் பொதுமக்களிடமிருந்து நூதனமுறையில் பல கோடி ரூபாய் பெற்று அதிக லாபம் தருவதாக கூறி மோசடி செய்து ஏமாற்றி வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருச்சி உறையூரை சேர்ந்த ஆனந்த் என்பவர், தென்னூர் உக்ரா டவர்ஸ் முதல் தளத்தில் ‘ஆஸ்பையர் டிரேடிங் சொலியூசன்’ என்ற பெயரில் ஆன்-லைன் வர்த்தகம் என்ற நிறுவனத்தை ஆரம்பித்தார். அந்நிறுவனத்தில் அதில் பொதுமக்களை கவரும் வண்ணம் அதிகபட்ச வட்டித்தொகை தருவதாக வாக்குறுதிகளை அளித்து, அதன்படி ரூ.1 லட்சத்தை ஒரு வருடத்திற்கு முதலீடு செய்பவர்களுக்கு மாதம் ரூ.25 ஆயிரம் பணத்தை அந்தந்த மாதத்தின் 15-ந் தேதிகளில் ரூ.12 ஆயிரத்து 500-ம், அந்த மாத இறுதியில் ரூ.12 ஆயிரத்து 500-ம் என மொத்தம் ரூ.25 ஆயிரத்தை 12 மாதங்கள் வீதம் ரூ.3 லட்சம் திருப்பி தருவதாக பொய்யான வாக்குறுதியை அளித்துள்ளார்.

பல கோடி ரூபாய் மோசடி

மேலும் பொதுமக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக பணம் பெற்றுக்கொண்டதற்கு ரசீதுகளை அளித்தும், ரூ.100-க்கு 12 சதவீதம் வட்டி தருவதாக ஒப்பந்த பத்திரம் ஒன்றையும் ஏற்படுத்தி இதுபோன்று சுமார் 800 பேரிடமிருந்து பல கோடி ரூபாய் மோசடியாக பெற்று ஏமாற்றியுள்ளது தெரியவருகிறது. மேற்படி குற்ற சம்பவத்தில் ஒரு மாத காலமாக தலைமறைவாக இருந்து வரும் மேற்படி ஆனந்த் என்பவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

திருச்சியில் இதுபோன்று பல நிறுவனங்கள் ஆங்காங்கே தோன்றி பொதுமக்களை ஏமாற்றி மோசடி செய்து வருவதாக தெரியவருவதால் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மேலும் இதுபோன்று பலவிதமான போலியான கவர்ச்சி திட்டங்களை விளம்பரப்படுத்தி பொதுமக்களை ஏமாற்றும் போலியான நிறுவனங்கள் மற்றும் நபர்களை பற்றி மாநகர காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த தகவலை திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் தெரிவித்துள்ளார்.

Next Story