ஆண்டிப்பட்டி ஜவுளி கடையில், துணிகள் திருடிய பெண் சிக்கினார் - மேலும் 2 பேருக்கு வலைவீச்சு
ஆண்டிப்பட்டி ஜவுளி கடையில் துணிகள் திருடிய பெண் சிக்கினார். மேலும் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஆண்டிப்பட்டி,
ஆண்டிப்பட்டியை சேர்ந்தவர் சரஸ்வதி (வயது 60). இவருக்கு சொந்தமான ஜவுளி கடை ஆண்டிப்பட்டி பஸ்நிலையம் அருகே உள்ளது. கடந்த 25-ந்தேதி பகல் நேரத்தில் கடையில் சரஸ்வதி மட்டும் தனியாக இருந்தார். அப்போது 3 பெண்கள் துணிகள் வாங்குவதை போல் வந்துள்ளனர்.
கடையில் சரஸ்வதி திரும்பி இருந்தபோது, அவருக்கு தெரியாமல் நைட்டிகளை அந்த பெண்கள் திருடி சென்றனர். அவர்கள் சென்ற பிறகு, துணிகளை அவர் எடுத்து வைத்தார். அப்போது 12 நைட்டிகள் திருடு போனதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து ஆண்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். சம்பவம் நடந்த தினத்தில் கண்காணிப்பு கேமராவில் 3 பெண்கள் நைட்டிகளை திருடும் காட்சிகள் பதிவாகி இருந்தன. அதனை துருப்பு சீட்டாக கொண்டு போலீசார் அந்த பெண்களை தேடினர்.
போலீஸ் விசாரணையில், ஜவுளி கடையில் திருடியது கம்பம் அருகேயுள்ள காமயகவுண்டன்பட்டியை சேர்ந்த கர்ணன் மனைவி செல்வி (36), அதே பகுதியை சேர்ந்த ஈஸ்வரி, அங்கீஸ்வரி ஆகிய 3 பேர் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் காமயகவுண்டன்பட்டிக்கு சென்று செல்வியை பிடித்தனர். அவரிடம் இருந்து கடையில் திருடிய 12 நைட்டிகளை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ஈஸ்வரி, அங்கீஸ்வரி ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது சின்னமனூர் போலீஸ் நிலையத்தில் திருட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story