அதிகாலை நேரத்தில் விபத்தை தவிர்க்க, வாகன ஓட்டிகளுக்கு டீ கொடுத்து தூக்கத்தை போக்கும் போலீசார்


அதிகாலை நேரத்தில் விபத்தை தவிர்க்க, வாகன ஓட்டிகளுக்கு டீ கொடுத்து தூக்கத்தை போக்கும் போலீசார்
x
தினத்தந்தி 29 July 2019 3:45 AM IST (Updated: 29 July 2019 4:39 AM IST)
t-max-icont-min-icon

அதிகாலை நேரத்தில் விபத்து ஏற்படுவதை தவிர்க்க வாகன ஓட்டிகளுக்கு தூக்கத்தை போக்கும் வகையில் போலீசார் டீ கொடுக்கின்றனர்.

கோவை,

கோவையை அடுத்த சூலூர் பட்டணம் பிரிவில் நேற்று முன்தினம் அதிகாலையில் காரும் லாரியும் மோதிக்கொண்டதில் 5 பேர் பலியானார்கள். இதில் காரை ஓட்டி வந்தவர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து கோவையை அடுத்த எல் அண்டு டி பைபாஸ் சாலையில் சூலூர் போலீசார் நேற்று அதிகாலையில் வந்த வாகனங்களை நிறுத்தினார்கள்.

பின்னர், அந்த வாகன ஓட்டிகளை இறங்க சொல்லி முகம் கழுவ வைத்த னர். இதையடுத்து அவர் களின் தூக்கத்தை போக்கும் வகையில் டீ கொடுத்து சிறிது நேரம் ஓய்வெடுத்து செல்லுமாறு அறிவுறுத் தினர். கருமத்தம்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு பாஸ்கரன் தலைமையில் சூலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கராஜ் மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் வாகன ஓட்டிகளின் தூக்க கலக்கத்தை போக்கும் வகையில் டீ கொடுத்தனர்.

இது குறித்து போலீஸ் துணை சூப்பிரண்டு பாஸ்கரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

கோவையை அடுத்த எல் அண்டு டி பைபாஸ் சாலையில் இரவில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. அதிலும் விபத்து அதிகமாக நடப்பது அதிகாலை நேரத்தில் தான். அதாவது அதிகாலை 3 மணி முதல் 5 மணி வரை வாகன ஓட்டிகளுக்கு தூக்கம் வரும். அந்த சமயங்களில் தான் விபத்துகள் நடக்கிறது.

அதிலும் குறிப்பாக சொந்தமாக கார் வைத்து ஓட்டி செல்பவர்கள் தான் விபத்துகளில் சிக்குகிறார்கள். இதை கருத்தில் கொண்டு விபத்து ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் உத்தரவின்பேரில் சூலூரில் நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களை தினமும் அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை நிறுத்தி லாரி, பஸ் உள்ளிட்ட வாகன டிரைவர்களுக்கும் டீ கொடுத்து அனுப்புவதை வழக்கமாக செய்ய உள்ளோம்.

இதற்கு லாரி உள்பட வாகன ஓட்டுனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இதன் மூலம் அதிகாலை நேரத்தில் தூக்க கலக்கத்தினால் ஏற்படும் விபத்துகளை தவிர்க்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story