கம்பம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில், கூடுதல் பணிக்கு சம்பளம் கேட்ட டிரைவர் பணியிடை நீக்கம் - பஸ்சில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு


கம்பம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில், கூடுதல் பணிக்கு சம்பளம் கேட்ட டிரைவர் பணியிடை நீக்கம் - பஸ்சில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 29 July 2019 4:00 AM IST (Updated: 29 July 2019 4:39 AM IST)
t-max-icont-min-icon

கம்பத்தில் கூடுதல் பணிக்கு சம்பளம் கேட்ட அரசு பஸ் டிரைவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதனால் அவர் பஸ்சில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கம்பம், 

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள ஜெயமங்கலத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 45). இவர் கம்பம் அரசு போக்குவரத்து கழக பணிமனை கிளை 2-ல் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் பாலகிருஷ்ணன் போக்குவரத்து கழக திண்டுக்கல் மண்டல மேலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பினார்.

அதில் கம்பத்தில் இருந்து திண்டுக்கல் செல்லும் சாலையில் அதிகமாக வேகத்தடை, வேகத்தடுப்பு கம்பிகள் இருப்பதாகவும், வழித்தடங்களில் போக்குவரத்து கழகம் ஒதுக்கிய நேரத்தில் சென்று வர முடியவில்லை. மேலும் 8 மணி நேரத்திற்கு மேல் பணி செய்வதால், கூடுதல் சம்பளம் வழங்க வேண்டும். இல்லையென்றால் கம்பத்தில் இருந்து செம்பட்டி வரை தான் பஸ்சை இயக்குவேன் என்று கூறியிருந்தார்.

இதற்கு அதிகாரிகள் பதில் ஏதும் தெரிவிக்கவில்லை. இதனால் கடந்த 26-ந்தேதி கம்பத்தில் இருந்து திண்டுக்கல்லுக்கு பாலகிருஷ்ணன் பஸ்சை ஓட்டி சென்றார். அப்போது செம்பட்டி வரை சென்று விட்டு, மீண்டும் கம்பத்திற்கு வந்ததாக கூறப்படுகிறது. இதனையறிந்த போக்குவரத்து கழக அதிகாரி அவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதற்கான உத்தரவை அவரிடம் கம்பம் போக்குவரத்து கழக கிளை மேலாளர் பாண்டியராஜன் வழங்கவில்லை.

இந்நிலையில் நேற்று மதியம் 2 மணிக்கு வழக்கம்போல் பாலகிருஷ்ணன் பணிக்கு வந்தார். பணிமனையில் இருந்து பஸ்சை அவர் எடுக்க முயன்றார். உடனே அங்கு வந்த கிளை மேலாளர் பஸ்சை இயக்கக்கூடாது என்று கூறினார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பஸ்சில் டிரைவர் இருக்கையில் அமர்ந்து கொண்டு பாலகிருஷ்ணன் இறங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து பணிமனையின் நுழைவு வாயிலை மூட கிளை மேலாளர் உத்தரவிட்டார்.

இதன்காரணமாக பணிமனையில் இருந்து மற்ற பஸ்கள் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து கம்பம் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்னிவளவன் தலைமையில் போலீசார் அங்கு வந்த பாலகிருஷ்ணனுடன் பஸ்சை விட்டு இறங்க கூறினர். ஆனால் பஸ்சை விட்டு அவர் இறங்க மறுத்தார். இதையடுத்து அவரை குண்டுக்கட்டாக தூக்கி போலீசார் கீழே இறக்கினர். பின்னர் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுபோன்ற போராட்டத்தில் ஈடுபடக்கூடாது. தங்களுடைய பிரச்சினைக்கு அதிகாரிகளுடன் பேசி தீர்வு காண வேண்டும் என்று போலீசார் அவருக்கு அறிவுரை கூறினர்.

அதன்பின்பு தொழிற்சங்கத்தினர் கிளை மேலாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு பாலகிருஷ்ணன் அங்கு இருந்து சென்றார். அதன் பின்னர் பணிமனையில் இருந்து பஸ்கள் புறப்பட்டு சென்றன. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story