ஆண்டிப்பட்டியில், அடிப்படை வசதிகள் இல்லாத வாரச்சந்தை

ஆண்டிப்பட்டி வாரச்சந்தையில் அடிப்படை வசதிகள் இல்லாததால் வியாபாரிகளும், பொதுமக்களும் அவதிப்பட்டு வருகின்றனர்.
ஆண்டிப்பட்டி,
ஆண்டிப்பட்டியில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் பகுதியில் வாரச்சந்தை அமைந்துள்ளது. ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமைதோறும் சந்தை செயல்படுகிறது. இந்த சந்தைக்கு ஆண்டிப்பட்டி மற்றும் சுற்றுவட்டாரங்களை சேர்ந்த வியாபாரிகள் வந்து காய்கறிகளை விற்பனை செய்து வருகின்றனர். இந்த சந்தைக்கு ஏராளமான மக்கள் வந்து காய்கறிகளை வாங்கி செல்கின்றனர். ஒவ்வொரு திங்கட்கிழமையும் பஜார் வீதியில் இருந்து சந்தை வளாகம் வரையில் நூற்றுக்கணக்கான கடைகள் அமைக்கப்பட்டு இருக்கும். வாரச்சந்தை வளாகத்தில் கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை. இதனால் வியாபாரிகளும், பொதுமக்களும் அவதிப்பட்டு வருகின்றனர்.
சந்தையில் சில பகுதியில் கூடாரங்கள் அமைக்கப்படவில்லை. ஏற்கனவே போடப்பட்ட இரும்பு கூடாரங்கள் போதிய பராமரிப்பு இல்லாததால், தற்போது சிமெண்டு தளம் சேதமடைந்து மேற்கூரை தாங்கி நிற்கும் கம்பி சாய்ந்து விழும் நிலையில் உள்ளது. மேலும் சந்தை வளாகத்தில் ஆங்காங்கே கொட்டப்படும் குப்பைக் கழிவுகளை முறையாக அகற்றுவதில்லை. அதுமட்டுமின்றி சந்தை வளாகத்தில் சாக்கடை கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் சந்தையில் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது.
ஆண்டிப்பட்டி வாரச்சந்தையில் மின்விளக்கு வசதி இல்லை. இதனால் மாலை 6 மணிக்கு மேல் வியாபாரிகள் இருளில் விற்பனை செய்யும் நிலை உள்ளது. இரவு நேரத்தில் சந்தையில் திருடர்கள் கைவரிசை காட்டி வருகின்றனர். இதனால் இருள் தொடங்கிய பின்னர் சந்தைக்கு வரும் மக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. எனவே ஆண்டிப்பட்டி வாரச்சந்தையில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்று வியாபாரிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story






