குன்றத்தூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடிய வழக்கில் 3 பேர் கைது ஆட்டோவில் நோட்டமிட்டு வீடுகளில் கைவரிசை


குன்றத்தூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடிய வழக்கில் 3 பேர் கைது ஆட்டோவில் நோட்டமிட்டு வீடுகளில் கைவரிசை
x
தினத்தந்தி 30 July 2019 4:00 AM IST (Updated: 29 July 2019 9:36 PM IST)
t-max-icont-min-icon

குன்றத்தூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பொருட்கள் திருடிய வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். ஆட்டோக்களில் நோட்டமிட்டு வீடுகளில் கைவரிசை காட்டினர்.

பூந்தமல்லி,

குன்றத்தூர் அடுத்த இரண்டாம் கட்டளை, பெசில் கார்டன் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணய்யா (வயது 48). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர் கடந்த வாரம் வீட்டை பூட்டிவிட்டு, மாடியில் உள்ள அறையில் குடும்பத்துடன் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள், அவர் உறங்கிக் கொண்டிருந்த அறையின் கதவை வெளிப்புறமாக தாழ்ப்பாள் போட்டு விட்டு, வீட்டின் பூட்டை உடைத்து நகை, எல்.இ.டி. டி.வி. உள்ளிட்ட பொருட்களை திருடிச் சென்றுவிட்டனர்.

இதுகுறித்து போரூர் உதவி கமிஷனர் செம்பேடு பாபு, குன்றத்தூர் இன்ஸ்பெக்டர் சார்லஸ் ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை தீவிரமாக வலைவீசி தேடி வந்தனர். மேலும் கொள்ளை சம்பவம் நடந்த பகுதியில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு விசாரணை செய்தபோது, மர்ம திருடர்கள் ஆட்டோவில் வந்து திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, இச்சம்பவத்தில் ஈடுபட்ட ஓட்டேரியைச் சேர்ந்த முருகன் (36), செல்வம் (32), பிரான்சிஸ் (28) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

போலீசார் விசாரணையில், 3 பேரும் பகல் நேரங்களில் பெயிண்டர், சாமியான பந்தல் மற்றும் ஆட்டோ ஓட்டும் வேலை என தனித்தனியே செய்து கொண்டு, இரவு நேரங்களில் ஒன்று சேர்ந்து ஆட்டோவில் சென்று பூட்டி இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு அந்த வீடுகளில் திருடுவதை வழக்கமாக கொண்டிருந்தது தெரியவந்தது. மேலும், இவர்கள் மீது ஏற்கனவே பல கொள்ளை வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, அவர்களிடமிருந்து 7 பவுன் நகைகள், எல்.இ.டி. டி.வி., பித்தளை பாத்திரங்கள், ஆட்டோ ஆகியவற்றை பறிமுதல் செய்து 3 பேரையும் சிறையில் அடைத்தனர்.

Next Story