மது குடிக்க பணம் தராத தாய் அடித்துக்கொலை மகன் கைது


மது குடிக்க பணம் தராத தாய் அடித்துக்கொலை மகன் கைது
x
தினத்தந்தி 30 July 2019 5:00 AM IST (Updated: 30 July 2019 1:15 AM IST)
t-max-icont-min-icon

முசிறி அருகே மது குடிக்க பணம் தராத தாயை உருட்டுக்கட்டையால் அடித்துக்கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.

முசிறி,

திருச்சி மாவட்டம், முசிறி அருகே உள்ள ஏவூர் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன். கூலி தொழிலாளி. இவருடைய மனைவி தமிழரசி(வயது 57). இவர்களுடைய மகன் கண்ணதாசன் (32). ஐ.டி.ஐ. படித்துள்ள இவர், கூலி வேலைக்கு சென்று வந்தார்.

கண்ணதாசனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் அவர் மது குடிக்க பணம் கேட்டு, தினமும் பெற்றோர்களிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று சீனிவாசன், கண்ணதாசனிடம் 100 ரூபாய் கொடுத்துவிட்டு கூலி வேலைக்கு சென்றார். பின்னர் வீட்டில் இருந்த தமிழரசியிடம் கண்ணதாசன் மது குடிப்பதற்கு மேலும் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். ஆனால் அவருக்கு பணம் கொடுக்காத தமிழரசி, வீட்டின் அருகில் உள்ள கோவில் வளாகத்திற்கு சென்று அமர்ந்துள்ளார்.

இதனால் கண்ணதாசன் ஆத்திரமடைந்தார். இதையடுத்து அவர் உருட்டுக்கட்டையை எடுத்து சென்று தமிழரசியின் தலையில் தாக்கினார். இதில் படுகாயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு முசிறி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே தமிழரசி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த முசிறி போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்ராஜ் தலைமையிலான போலீசார், தமிழரசியின் உடலை கைப்பற்றி முசிறி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிந்து கண்ணதாசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

‘பெற்ற மனம் பித்து, பிள்ளை மனம் கல்‘ என்று சொல்லப்படுவது உண்டு. அதற்கேற்றாற்போல், மது குடிக்க பணம் தராததால் பெற்ற தாயை மகனே உருட்டுக்கட்டையால் அடித்துக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story