கம்பம் போக்குவரத்து கழக பணிமனையில், போராட்டத்தில் ஈடுபட்ட டிரைவர் மீது வழக்கு


கம்பம் போக்குவரத்து கழக பணிமனையில், போராட்டத்தில் ஈடுபட்ட டிரைவர் மீது வழக்கு
x
தினத்தந்தி 30 July 2019 4:00 AM IST (Updated: 30 July 2019 2:24 AM IST)
t-max-icont-min-icon

கம்பம் அரசுபோக்குவரத்து கழக பணிமனையில் கூடுதல் பணிக்கு சம்பளம் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட டிரைவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கம்பம்,

பெரியகுளம் அருகேயுள்ள ஜெயமங்கலத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 45). இவர் கம்பம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் 8 மணி நேரத்திற்கு கூடுதலாக பணி செய்வதாகவும், அதற்கு சம்பளம் வழங்க வேண்டும் என்று போக்குவரத்து கழக மண்டல மேலாளருக்கு கடிதம் ஒன்று அனுப்பி இருந்தார். ஆனால் அவருக்கு பதில் ஏதும் அதிகாரிகள் கூறவில்லை. இதையடுத்து கடந்த 26-ந்தேதி கம்பத்தில் இருந்து திண்டுக்கல் செல்லும் பஸ்சை செம்பட்டி வரை இயக்கியதாக வந்த புகாரின்பேரில், அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் பணிமனையில் பஸ்சில் ஏறி அமர்ந்து கீழே இறங்க மறுத்து டிரைவர் பாலகிருஷ்ணன் போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து கம்பம் வடக்கு போலீசார் வந்து அவரை குண்டுக்கட்டாக தூக்கி கீழே இறக்கினர். பின்னர் போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

இந்நிலையில் கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்தில் கம்பம் அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளர் பாண்டியராஜன் புகார் கொடுத்தார். அதில் டிரைவர் பாலகிருஷ்ணன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை மனதில் கொண்டு, நேற்று முன்தினம் பணிமனையில் பஸ்சில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் எந்த பஸ்சும் வெளியே செல்ல முடியவில்லை.

இதனை தட்டி கேட்டவர்களை பாலகிருஷ்ணன் அவதூறாக பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறியிருந்தார். அதன்பேரில் பாலகிருஷ்ணன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story