ஆண்டிப்பட்டியில், கூட்டுக்குடிநீர் குழாய் உடைந்து வீணாகும் தண்ணீர் - நோய் பரவும் அபாயம்


ஆண்டிப்பட்டியில், கூட்டுக்குடிநீர் குழாய் உடைந்து வீணாகும் தண்ணீர் - நோய் பரவும் அபாயம்
x
தினத்தந்தி 30 July 2019 4:00 AM IST (Updated: 30 July 2019 2:24 AM IST)
t-max-icont-min-icon

ஆண்டிப்பட்டியில் வைகை அணை-சேடப்பட்டி கூட்டுக்குடிநீர் திட்ட குழாய் உடைந்து வீணாகும் தண்ணீர் குப்பைகளில் தேங்கி நிற்பதால் நோய் பரவும் அபாயம் உள்ளது.

ஆண்டிப்பட்டி, 

ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையில் இருந்து கூட்டுக்குடிநீர் திட்டத்தின்கீழ் மதுரை மாநகருக்கும், உசிலம்பட்டி அருகே உள்ள சேடப்பட்டி பகுதிகளுக்கும் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. இதற்காக வைகை அணையில் இருந்து மதுரை மாநகருக்கும், சேடப்பட்டிக்கும் ஆண்டிப்பட்டி வழியாக ராட்சத குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளது. மேலும் தண்ணீர் சீராக செல்லும் வகையில் ஆங்காங்கே ஏர்வால்வுகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் ஆண்டிப்பட்டியில், வைகை அணை-சேடப்பட்டி கூட்டுக்குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு, பல நாட்களாக குடிநீர் வெளியேறி குப்பை கிடங்கில் தேங்கி நிற்கிறது. ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீணாகி வருகிறது. குழாய் உடைப்பு குறித்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தனர். ஆனால் இதுவரை உடைப்பை சரி செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

குப்பை கழிவுகளில் தேங்கி நிற்கும் தண்ணீர் மீண்டும் அந்த குழாய்க்குள் செல்வதால் குடிநீர் மாசு ஏற்பட்டு வருகிறது. இதனால் கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் சேடப்பட்டி பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உருவாகியுள்ளது. எனவே சேடப்பட்டி கூட்டுக்குடிநீர் திட்ட ராட்சத குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்ய அரசு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story