கூட்டுறவு சங்க கொட்டகைக்கு தீ வைப்பு: பால் கேன்களுடன் பெண்கள் சாலைமறியல், புதுவை அருகே 2–வது நாளாக பரபரப்பு
கூட்டுறவு பால் சங்க கொட்டகைக்கு தீ வைத்தவர்களை கைது செய்யக்கோரி பால் கேன்களுடன் பெண்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் திருக்கனூர் அருகே 2–வது நாளாக பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி,
புதுவை மாநிலம் திருக்கனூர் அருகே விநாயகம்பட்டு கிராமத்தில் கூட்டுறவு பால் சங்கம் உள்ளது. இதன் கூரைக் கொட்டகைக்கு கடந்த 27–ந் தேதி நள்ளிரவு மர்மநபர்கள் தீவைத்ததாக கூறப்படுகிறது. இதில் கொட்டகை முழுவதும் தீயில் எரிந்து நாசமானது.
இதை பார்த்து ஆத்திரம் அடைந்த கிராம மக்கள், கூட்டுறவு சங்க கொட்டகைக்கு தீவைத்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி விநாயகம்பட்டு பஸ் நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த திருக்கனூர் போலீசார் விரைந்து வந்து, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கூரை கொட்டகைக்கு தீ வைத்தவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்? என்று உறுதி அளித்தனர். இதை ஏற்று கிராம மக்கள் மறியலை கைவிட்டு கலைந்துசென்றனர். இதற்கிடையே கூட்டுறவு பால் சங்க செயலாளர் மகேந்திரன் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று காலை அப்பகுதியை சேர்ந்தவர்கள் வழக்கம்போல் பால் ஊற்றுவதற்காக கூட்டுறவு பால் சங்கத்துக்கு வந்தனர். ஆனால் கூட்டுறவு சங்கத்துக்கு தீ வைக்கப்பட்டதால், இடவசதியின்றி பால் கொள்முதல் செய்யப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பெண்கள், தாங்கள் கொண்டு வந்த பால் கேன்களுடன் திடீர் மறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்களும் போராட்டத்தில் இறங்கினர்.
இதுபற்றி தகவல் அறிந்த திருக்கனூர் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் வேலு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கூட்டுறவு சங்க கொட்டகைக்கு தீ வைத்தவர்களை இதுவரை கைது செய்யாதது ஏன் என்று போலீசாரிடம் அவர்கள் வாக்குவாதம் செய்தனர்.
இந்த சம்பவத்தை, கொட்டகைக்கு தீ வைத்ததாக கிராம மக்களால் சந்தேகப்படும் நபர்கள் சிலர், அங்கு நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். இதனால் ஆவேசம் அடைந்த கிராம மக்கள், அவர்களை தாக்குவதற்காக விரட்டினர். உடனே அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
நிலைமை மோசமானதை உணர்ந்த போலீசார், கிராம மக்களை தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும், கிராம மக்களுக்கும் தள்ளு–முள்ளு ஏற்பட்டது. பின்னர் கிராம மக்களை போலீசார் சமாதானம் செய்து, கொட்டகைக்கு தீ வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து கிராம மக்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர்.
காலை 8 மணி முதல் 9 மணி வரை நடந்த இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பள்ள, கல்லூரி, அலுவலங்களுக்கு வேலைக்கு செல்வோர் அவதிப்பட்டனர். இரு பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்படும் அபாயம் உள்ளதால் அங்கு திருக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். கிராம மக்களின் போராட்டத்தால் விநாயகம்பட்டு கிராமத்தில் 2–வது நாளாக நேற்று பரபரப்பு ஏற்பட்டது.