கூலி உயர்வு வழங்கக்கோரி பித்தளை குத்துவிளக்கு உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தம்


கூலி உயர்வு வழங்கக்கோரி பித்தளை குத்துவிளக்கு உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தம்
x
தினத்தந்தி 30 July 2019 4:30 AM IST (Updated: 30 July 2019 2:25 AM IST)
t-max-icont-min-icon

கூலி உயர்வு வழங்கக்கோரி பித்தளை குத்துவிளக்கு உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

திருவிடைமருதூர்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவில் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது குத்து விளக்குகள். இங்கு உற்பத்தி செய்யப்படும் பித்தளை விளக்குகள் உலகம் முழுவதும் பிரசித்திப்பெற்றவை. நாச்சியார்கோவிலில் 250-க்கும் மேற்பட்ட குத்துவிளக்கு உற்பத்தி பட்டறைகள் உள்ளன.

இந்த பட்டறைகளில் குத்துவிளக்கு உற்பத்தி செய்வதற்கான பணிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். உற்பத்தியாளர்கள் உற்பத்தி செய்யக்கூடிய குத்துவிளக்குகளை மொத்த வியாபாரிகள் உற்பத்திக்கான கூலியை கொடுத்து வாங்கி கொள்கிறார்கள்.

கூலி உயர்வு

உற்பத்திக்கான மூலப்பொருட்கள் விலை உயர்வு காரணமாக சாதாரண விளக்குகளுக்கு 75 சதவீதமும், எடை விளக்குகளுக்கு 50 சதவீதமும் கூலி உயர்வு வழங்க வேண்டும் என உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதை வலியுறுத்தி நேற்று முன்தினம் குத்து விளக்கு உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து வியாபாரிகள் சங்கத்தினர் மற்றும் உற்பத்தியாளர் சங்கத்தினர் கூலி உயர்வு தொடர்பாக நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

நாச்சியார்கோவில் சமத்தனார்குடி சமுதாய கூடத்தில் இந்த பேச்சுவார்த்தை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பித்தளை குத்துவிளக்கு வியாபாரிகள் சங்க தலைவர் நசீர்அகமது, செயலாளர் பாஸ்கரன், குத்துவிளக்கு உற்பத்தியாளர் சங்கங்களின் தலைவர்கள் கலியமூர்த்தி, மணி, செயலாளர்கள் தம்பி.சீனிவாசன், ராமதாஸ், துணை தலைவர் ஜெகன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

2-வது நாளாக...

கூட்டத்தில் இரு தரப்பினர் இடையே உடன்பாடு ஏற்படாததால், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் கூலி உயர்வு கிடைக்கும் வரை குத்துவிளக்கு உற்பத்தியை நிறுத்தம் செய்து தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு எடுத்தனர்.

அதன்படி நேற்று 2-வது நாளாக வேலை நிறுத்தம் நடந்தது. வேலை நிறுத்தம் காரணமாக 10 ஆயிரத்துக்கும் அதிகமான குத்துவிளக்கு உற்பத்தி தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

Next Story