தாராபுரத்தில் தலைமை ஆசிரியை வீட்டில் 50 பவுன்–ரூ.2 லட்சம் திருட்டு
தாராபுரத்தில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் நகை மற்றும் ரூ.2 லட்சத்தை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடிவருகிறார்கள்.
தாராபுரம்,
தாராபுரம் சித்தராவுத்தன்பாளையம் மேற்கு தெருவை சேர்ந்தவர் முகமது உபையத்துல்லா (வயது 65). இவர் அரபு நாட்டில் என்ஜினீயராக வேலை செய்து விட்டு தற்போது தாராபுரத்தில் வசித்து வருகிறார். இவரது மனைவி சசீர்பானுபேகம் (59). இவர் தாராபுரம் என்.ஜி.ஓ. காலனியில் உள்ள அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இவர்கள் வீட்டில் அந்த பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த நிஷா(27) என்பவர் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் கணவன்–மனைவி இருவரும் கடந்த 19–ந் தேதி வீட்டை பூட்டி விட்டு வீட்டின் சாவியை நிஷாவிடம் கொடுத்துவிட்டு கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றுவிட்டனர்.
இந்த நிலையில் வேலைக்கார பெண் நிஷா, நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு, முகமது உபையத்துல்லாவின் வீட்டிற்குச் சென்று, வீட்டை சுத்தம் செய்துவிட்டு வந்தார். அதன் பிறகு நேற்று காலை முகமது உபையத்துல்லா தனது மனைவியுடன் பாலக்காட்டிலிருந்து வீட்டிற்கு திரும்பி வந்தார். இருவரும் வீட்டின் முன்பக்க கதவை திறந்து உள்ளே சென்றனர். அப்போது வீட்டின் உள்ளே இருந்த அனைத்து அறைகளின் கதவுகளும் உடைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
பிறகு அறைக்குள் சென்று பார்த்தபோது, அங்கு இருந்த பீரோக்களை மர்ம ஆசாமிகள் உடைத்து, அதிலிருந்த 50 பவுன் நகை மற்றும் ரூ.2 லட்சத்தை திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. உடனே இது குறித்து தாராபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன் பேரில் தாராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவுதமன், சப்–இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் குற்றப்பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். அதில் முகமது உபையத்துல்லா வீட்டின் பின்பக்கத்தில் உள்ள இரும்பு கதவை நள்ளிரவில் மர்ம ஆசாமிகள் உடைத்து உள்ளே புகுந்துள்ளதும், அதன் பின்னர் வீட்டின் உள்ளே அறைகளின் கதவை உடைத்து, நகை மற்றும் பணத்தை திருடிச் சென்றிருப்பதும் தெரியவந்தது.
மேலும் மோப்பநாய் டெவில் வரவழைக்கப்பட்டது. அது சம்பவ வீட்டில் இருந்து மோப்பம் பிடித்தபடி ஓடியது. பின்னர் நேரு நகரில் உள்ள ஒரு விநாயகர்கோவில் வரை சென்று நின்றுவிட்டது.. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. அத்துடன் கை ரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் சம்பவ வீட்டில் பதிவான தடயங்களை சேகரித்தனர். இது குறித்த புகாரின் பேரில் தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம ஆசாமிகளை தேடிவருகிறார்கள்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.