போலீஸ் நிலையத்தில் துன்புறுத்தியதால் தற்கொலை செய்தவர் விவகாரம்: துணை சூப்பிரண்டு உள்பட 6 பேர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை தமிழக அரசு, மதுரை ஐகோர்ட்டில் தகவல்
மதுரை ஊமச்சிகுளம் போலீஸ் நிலையத்தில் துன்புறுத்தியதால் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், துணை சூப்பிரண்டு உள்பட 6 பேர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது என மதுரை ஐகோர்ட்டில், தமிழக உள்துறை செயலாளர் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
மதுரை,
மதுரை ஆத்திகுளத்தை சேர்ந்த பூமயில் என்பவர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது–
எனது கணவர் மார்க்கண்டேயன். எங்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். கடந்த 2011–ம் ஆண்டில் எனது மூத்த மகள் திடீரென்று காணாமல் போனார். இதுதொடர்பாக ஊமச்சிகுளம் போலீசில் புகார் அளித்தோம். என் கணவரை விசாரணைக்காக போலீசார் அழைத்துச் சென்றனர். மறுநாள் எங்களை மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு வருமாறு போலீசார் அழைத்தனர். அங்கு சென்ற போது என் கணவர் பிணமாக கிடந்தார்.
விசாரித்தபோது, போலீஸ் நிலையத்தில் என் கணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தனர். போலீசார் அடித்து துன்புறுத்தியதால் தான் எனது கணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது சாவுக்கு போலீசார் தான் காரணம். எனவே சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்கவும், எங்களுக்கு இழப்பீடாக ரூ.25 லட்சம் வழங்கவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக உள்துறை செயலாளர் சார்பில் உள்துறை துணை செயலாளர் பதில் மனுவை தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:–
மனுதாரரின் கணவர் போலீஸ் நிலையத்தில் தற்கொலை செய்துள்ளார். அவரை போலீசார் மனரீதியாக துன்புறுத்தியது நிரூபிக்கப்பட்டு உள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக ஊமச்சிகுளம் சரக டி.எஸ்.பி. தங்கவேலு (பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் மற்றும் ஓய்வுபெற அனுமதிக்கப்படவில்லை), இன்ஸ்பெக்டர் பாலாஜி, சப்–இன்ஸ்பெக்டர் ராதாமகேஷ், சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் ஜெயராமன் (இவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் மற்றும் ஓய்வுபெற அனுமதிக்கப்படவில்லை), போலீஸ்காரர்கள் சோலைமலைக்கண்ணன், முருகன் ஆகிய 6 பேர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. இந்த பரிந்துரை மீது விரைவில் இறுதி முடிவு எடுக்க கூடுதலாக 2 மாதம் அவகாசம் வழங்க வேண்டும்‘ என்று கூறியிருந்தார்.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, இந்த வழக்கின் இறுதி விசாரணை வருகிற 13–ந்தேதி நடைபெறும் என்று, வழக்கை அன்றைக்கு ஒத்திவைத்தார்.