திருவாரூரில் மாத ஊக்கத்தொகை வழங்கக்கோரி கிராம கோவில் பூசாரிகள் ஆர்ப்பாட்டம்


திருவாரூரில் மாத ஊக்கத்தொகை வழங்கக்கோரி கிராம கோவில் பூசாரிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 31 July 2019 4:30 AM IST (Updated: 30 July 2019 10:59 PM IST)
t-max-icont-min-icon

பூசாரிகளுக்கு மாத ஊக்கத்தொகை வழங்கக்கோரி திருவாரூரில், கிராம கோவில் பூசாரிகள் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருவாரூர்,

திருவாரூரில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகம் முன்பு கிராம பூசாரிகள் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விசுவ இந்து பரிஷத் திருவாரூர் மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமை தாங்கினார்.

அருள் வாக்கு பேரவை மாவட்ட அமைப்பாளர் முத்துக்குமாரசாமி, பூசாரிகள் பேரவை மாவட்ட அமைப்பாளர் மணிவேல், பேரவை நகர அமைப்பாளர் சிவசங்கரன், நிர்வாகி செல்வம் உள்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தபடி அனைத்து பூசாரிகளுக்கும் மாத ஊக்கத்தொகை வழங்க வேண்டும். பூசாரிகள் ஓய்வூதியத்துக்கான ஆண்டு வருமான உச்சவரம்பை ரூ.72 ஆயிரமாக உயர்த்த வேண்டும். தமிழகத்தில் உள்ள கோவில்களில் அறங்காவலர் நியமிக்கப்படும்போது, அக்கோவிலை சார்ந்த பூசாரி ஒருவரையும் குழுவில் சேர்க்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், ஓய்வூதிய தொகையை ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். இலவச தொகுப்பு வீடுகள் பூசாரிகளுக்கு வழங்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.

Next Story