திண்டிவனம் அரசு மருத்துவமனையில், கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து விவசாயி பலி
திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த விவசாயி, கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்தார்.
திண்டிவனம்,
திண்டிவனம் அருகே உள்ள ஊரல் கிராமத்தை சேர்ந்தவர் தனபால் (வயது 70), விவசாயி. இவருக்கு நேற்று முன்தினம் காலை திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. உடனே அவரது மகன் டிரைவர் குணசேகரன், தனபாலை சிகிச்சைக்காக ஆட்டோவில் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தார். அப்போது மருத்துவமனையில் கூட்டம் அதிகமாக இருந்ததால் குணசேகரன் தனது தந்தையிடம் டாக்டரை பார்த்து சிகிச்சை பெற்றுவிட்டு, மருத்துவமனை வளாகத்தில் காத்திருக்குமாறும், தான் சவாரிக்கு சென்று விட்டு வந்து வீட்டுக்கு அழைத்து செல்வதாகவும் கூறிச் சென்றார்.
இதையடுத்து சுமார் 2 மணி நேரத்திற்கு பிறகு குணசேகரன் தனது தந்தையை அழைத்துச் செல்வதற்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு வந்தார். அப்போது அங்கு அவரது தந்தையை காணவில்லை. அதனால் தனது தந்தை பஸ் மூலம் வீட்டுக்கு சென்றிருக்கலாம் என்று எண்ணிய குணசேகரன், ஆட்டோவில் வீட்டுக்கு சென்றார். அப்போது தனது தந்தை வீட்டுக்கு வரவில்லை என்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த குணசேகரன் மற்றும் உறவினர்கள் மாயமான தனபாலை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.
இந்த நிலையில் திண்டிவனம் அரசு மருத்துவமனை வளாகத்தில் புதிய கட்டிடம் கட்டும் பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள் நேற்று காலை பணிக்கு வந்தனர். அப்போது அங்கு புதிதாக கட்டப்பட்டு வரும் கழிவுநீர் தொட்டியில் தேங்கியிருந்த மழைநீரில் முதியவர் ஒருவர் பிணமாக மிதந்தார். இதை பார்த்த கட்டிட தொழிலாளர்கள் மருத்துவமனை வளாகத்தில் உள்ள புறக்காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் ரோஷணை போலீசார் மற்றும் திண்டிவனம் தீயணைப்பு நிலைய அலுவலர் சந்தனகுமார் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இறந்து கிடந்த முதியவரின் உடலை மீட்டு, அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என விசாரணை நடத்தினர்.
விசாரணையில் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த ஊரல் கிராமத்தை சேர்ந்த தனபால் என்பதும், கழிவுநீர் தொட்டியின் மீது அமர்ந்திருந்தபோது தவறி உள்ளே விழுந்து தண்ணீரில் மூழ்கி பலியானதும் தெரியவந்தது. இதற்கிடையே சம்பவம் பற்றி அறிந்த தனபால் குடும்பத்தினர் மருத்துவமனைக்கு வந்து, அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். இதையடுத்து தனபால் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story