ஆண்டிப்பட்டி அருகே, கண்மாய் தூர்வாரும் பணி - கலெக்டர் ஆய்வு
ஆண்டிப்பட்டி அருகே கண்மாய் தூர்வாரும் பணியை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆண்டிப்பட்டி,
ஆண்டிப்பட்டி அருகே உள்ள கோவில்பட்டி கிராமத்தில் சக்கிலிச்சிகுளம் கண்மாய் அமைந்துள்ளது. இந்த கண்மாய் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ளது. இந்நிலையில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் இந்த கண்மாயை தூர்வார அரசு ரூ.79 லட்சம் ஒதுக்கீடு செய்தது.
அந்த நிதியின் மூலம் கண்மாய் தூர்வாரும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதுவரை நடந்துள்ள பணி விவரங்களை கேட்டறிந்தார். அடுத்து மேற்கொள்ளப்பட உள்ள பணி விவரங்களை கேட்டறிந்தார்.
ஆய்வைத் தொடர்ந்து கலெக்டர் பல்லவி பல்தேவ் கூறியதாவது:-
தமிழகத்தில் வறட்சியை எதிர்கொள்ளவும், நீர்வள ஆதாரங்களை மேலாண்மை செய்திடவும் விவசாயிகளின் பங்களிப்புடன் நீர்நிலைகளை புனரமைக்கும் பண்டைய குடிமராமத்து திட்டத்தினை செயல்படுத்திட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் தேனி மாவட்டத்தில் உள்ள குளங்களில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் வரத்து வாய்க்கால் மற்றும் கால்வாய்கள், மதகுகள் மற்றும் பிற நீர்நிலைகள் ஆகியவற்றை புனரமைத்தல், பலப்படுத்துதல், மதகுகளை மறுகட்டுமானம் செய்தல், நீர்வழிகளில் அடைத்திருக்கும் செடிகளை அகற்றுதல் போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கோவில்பட்டி கிராமத்தில் உள்ள சக்கிலிச்சிகுளம் கண்மாயை தூர்வாருவதன் மூலம் 206 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இப்பணிகள் மேற்கொள்வதன் மூலம் கால்வாயில் தண்ணீர் தங்குதடையின்றி சென்று கண்மாயை விரைந்து அடையும். வெள்ளக்காலங்களில் வாய்க்கால் மற்றும் கண்மாயில் உடைப்பு ஏற்படாமல் இருக்கும். மேலும், இக்கண்மாயை சுற்றியுள்ள முத்தனம்பட்டி, நாச்சியபுரம், ரெங்கசமுத்திரம், கோவில்பட்டி மற்றும் குஜியம்மாள்புரம் ஆகிய கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வைத் தொடர்ந்து, அந்த கண்மாய் நீரினை பயன்படுத்துவோர் சங்க உறுப்பினர்களிடம் இப்பணியின் தன்மை குறித்தும், குடிமராமத்து திட்டப் பணிகளை சிறப்பான முறையில் மேற்கொள்வது குறித்தும் கலெக்டர் ஆலோசனை நடத்தினார். ஆய்வின்போது, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயன், உதவி பொறியாளர் கணேசன், உதவி திட்ட அலுவலர் தண்டபாணி, தாசில்தார் சந்திரசேகரன், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் ஆண்டாள், ரங்கராஜன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story