மதுரை-போடி அகல ரெயில் பாதைக்காக, ஆண்டிப்பட்டி கணவாய் மலையில் பாறைகளை உடைக்கும் பணி
மதுரை-போடி அகல ரெயில் பாதை அமைப்பதற்கு ஆண்டிப்பட்டி கணவாய் மலையில் பாறைகளை உடைக்கும் பணி தொடங்கியது.
ஆண்டிப்பட்டி,
ஆங்கிலேயேர் ஆட்சிகாலத்தில் போடி-மதுரை இடையே மீட்டர்கேஜ் ரெயில் பாதை அமைக்கப்பட்டது. இதற்காக மதுரை-தேனி மாவட்ட எல்லையான ஆண்டிப்பட்டி கணவாய் மலையில், கடந்த 1920-ம் ஆண்டு சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் மலையை குடைந்து பாதை அமைக்கப்பட்டது. அதன்பின்னர் மதுரையில் இருந்து உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, தேனி வழியாக போடி வரையில் 1928-ம் ஆண்டு ரெயில் சேவை தொடங்கப்பட்டது.
அதன்பின்னர் போடி- மதுரை மீட்டர்கேஜ் ரெயில்பாதையை அகல ரெயில்பாதையாக மாற்ற முடிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த 2011-ம் ஆண்டு இந்த வழித்தடத்தில் ரெயில் சேவை நிறுத்தப்பட்டது. ஆனால் அகல ரெயில்பாதை திட்டத்திற்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யாததால் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான மத்திய அரசின் ரெயில்வே பட்ஜெட்டில் மதுரை-போடி அகல ரெயில்பாதை திட்டத்திற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும் வருகிற 2021-ம் ஆண்டில் மதுரை-போடி அகல ரெயில் பாதையை பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனையடுத்து அகல ரெயில்பாதை திட்டப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால் ஆண்டிப்பட்டி கணவாய் மலைப்பகுதியில் பாறைகளை உடைத்து அகலப்படுத்தும் பணி தொடங்கப்படாமல் இருந்தது. இந்த ரெயில் பாதை கணவாய் மலைப்பகுதியில் சுமார் 625 மீட்டர் தூரம் தேனி மாவட்டத்திலும், 400 மீட்டர் தூரம் மதுரை மாவட்டத்திலும் உள்ளது.
இதையடுத்து மதுரை- போடி அகல ரெயில் பாதை திட்டத்தில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் உள்ள கணவாய் மலைப்பாதையை அகலப்படுத்துவதற்காக மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
இதில் தேனி மாவட்டத்தில் கணவாய் மலையில் பாறைகளை உடைத்து அகலப்படுத்த ரூ.1¾ கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதனையடுத்து அந்த பகுதியில் மலையை குடைந்து அகலப்படுத்தும் பணி தொடங்கியது. மீட்டர் கேஜ் ரெயில் பாதைக்காக 3 மீட்டர் அகலம் கொண்ட ரெயில் பாதையை, 2 வழித்தடங்கள் அமைப்பதற்கு ஏற்றாற்போல், தற்போது 15 மீட்டர் வரை அகலப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சுமார் 100 ஆண்டுகளுக்கு பின்பு மதுரை-போடி அகல ரெயில்பாதை திட்டப்பணிக்காக கணவாய் மலைப்பகுதி அகலப்படுத்தப்பட்டு வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story