ஆண்டிப்பட்டி பகுதியில், திறந்தவெளியில் கொட்டப்படும் மருத்துவக்கழிவுகள்
ஆண்டிப்பட்டி பகுதியில் திறந்தவெளியில் மருத்துவக்கழிவுகள் கொட்டப்படுவதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு வருகிறது.
ஆண்டிப்பட்டி,
ஆண்டிப்பட்டி நகரில் அரசு மருத்துவமனை உள்பட ஏராளமான தனியார் மருத்துவமனைகள் செயல்பட்டு வருகிறது. மருத்துவமனையில் பயன்படுத்தப்படும் மருந்துகள், ஊசிகள், காயங்களுக்கு கட்டப்படும் துணிகள் உள்ளிட்ட மருத்துவக்கழிவுகளை வெளியிடங்களில் கொட்டக்கூடாது என்று அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் இதுபோன்ற மருத்துவக்கழிவுகளை அழிப்பதற்காக செயல்படும் தனியார் நிறுவனத்தில் தான் ஒப்படைக்க வேண்டும் என்றும் தனியார் மருத்துவமனை நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி மருத்துவக்கழிவுகளை அழிப்பதற்கு தனியார் நிறுவன ஊழியர்கள் குறிப்பிட்ட நாட்களுக்கு ஒருமுறை மருத்துவமனைகளுக்கு வந்து மருத்துவக்கழிவுகளை பாதுகாப்போடு எடுத்து செல்கின்றனர். ஆனால் ஆண்டிப்பட்டி நகரில் செயல்படும் சில தனியார் மருத்துவமனைகளில் பயன்படுத்தப்பட்ட மருத்துவக்கழிவுகளை சட்டவிரோதமாக பொதுமக்கள் குடியிருக்கும் பகுதிகளில் திறந்தவெளியில் குப்பையோடு குப்பையாக கொட்டி வருகின்றனர். மக்கள் வீடுகளில் இருந்து கொட்டப்படும் சாதாரண குப்பையுடன் மருத்துவ ஊசிகள், காயங்களுக்கு பயன்படுத்தப்பட்ட துணிகள் மற்றும் மருந்துகள் ஏராளமாக கொட்டப்பட்டு வருகிறது.
ஆண்டிப்பட்டி நகர் பகுதிகளில், பயன்படுத்தப்பட்ட ஊசிகள் மற்றும் காலாவதியான மருந்து பாட்டில்கள் என ஏராளமான மருத்துவ கழிவுகள் குப்பைகளோடு குவிந்து கிடக்கின்றன. சில தனியார் மருத்துவமனைகளின் இதுபோன்ற செயலால் சுகாதாரக்கேடு ஏற்படுவதுடன், தொற்றுநோய்களும் பரவும் அபாயமும் உருவாகியுள்ளது.
குப்பைகளோடு கிடக்கும் பயன்படுத்தப்பட்ட ஊசியின் பாதிப்புகள் குறித்து அறியாத சிறுவர்கள் அதனை எடுத்து விளையாடி வருகின்றனர். இதனால் சிறுவர்களுக்கு நோய்த் தாக்குதல் ஏற்படும் அபாயமும் உருவாகியுள்ளது.
எனவே ஆண்டிப்பட்டி நகரில் திறந்தவெளியில் மருத்துவக்கழிவுகளை கொட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இனிவரும் காலங்களில் இதுபோன்ற செயல்கள் நடக்காதவாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story