நெல்லை முன்னாள் பெண் மேயர் உள்பட 3 பேர் படுகொலை: சி.பி.சி.ஐ.டி. விசாரணை தொடங்கியது 21 பவுன் நகை-கத்தி மீட்பு


நெல்லை முன்னாள் பெண் மேயர் உள்பட 3 பேர் படுகொலை: சி.பி.சி.ஐ.டி. விசாரணை தொடங்கியது 21 பவுன் நகை-கத்தி மீட்பு
x
தினத்தந்தி 31 July 2019 4:30 AM IST (Updated: 30 July 2019 11:51 PM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாநகராட்சி முன்னாள் மேயர் உமாமகேசுவரி உள்பட 3 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று விசாரணையை தொடங்கினர்.

நெல்லை, 

நெல்லை மாநகராட்சி முன்னாள் மேயர் உமாமகேசுவரி உள்பட 3 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று விசாரணையை தொடங்கினர். மேலும், கைதான கார்த்திகேயன் வீட்டில் இருந்து 21 பவுன் நகை மீட்கப்பட்டது.

3 பேர் கொலை

நெல்லை மாநகராட்சி முதல் மேயர் உமாமகேசுவரி. பாளையங்கோட்டை அரசு என்ஜினீயரிங் கல்லூரி எதிரே ரோஸ் நகரில் உள்ள தனது வீட்டில் இருந்த உமாமகேசுவரி, அவருடைய கணவர் முருகசங்கரன் மற்றும் பணிப்பெண் மாரி ஆகியோர் கடந்த 23-ந் தேதி கொடூரமாக குத்திக்கொலை செய்யப்பட்டனர்.

தமிழகத்தையே உலுக்கிய இந்த கொலைகள் தொடர்பாக மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். மேலும், இந்த கொலைகளில் துப்பு துலக்க நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் பாஸ்கரன், துணை போலீஸ் கமிஷனர்கள் சரவணன், மகேஷ்குமார் ஆகியோர் மேற்பார்வையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் தங்கள் விசாரணையை மேற்கொண்டனர்.

தி.மு.க. பெண் பிரமுகர் மகன்

இந்த நிலையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையிலான தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் முன்னாள் மேயர் உமாமகேசுவரிக்கும், நெல்லையைச் சேர்ந்த தி.மு.க. பெண் பிரமுகர் சீனியம்மாளுக்கும் இடையே அரசியல் ரீதியாக முன்விரோதம் இருந்து வந்தது தெரியவந்தது. எனவே, சீனியம்மாளின் மகன் கார்த்திகேயனுக்கு இந்த கொலை சம்பவத்தில் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நகர்ந்தது.

அதை உறுதிபடுத்தும் விதமாக தனிப்படை போலீசார் உமாமகேசுவரியின் வீடு அருகே உள்ள ஓட்டலில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது அதில் சம்பவத்தன்று கார்த்திகேயனின் கார் அந்த பகுதியில் 2 முறை சென்று வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கைது

மேலும், உமாமகேசுவரியின் வீட்டின் அருகில் இருந்த செல்போன் கோபுரங்களில் பதிவான செல்போன் எண்களை சேகரித்து அதன் உரையாடல்களும் ஆய்வு செய்யப்பட்டன. அதில் கார்த்திகேயனின் செல்போன் எண் அடிக்கடி பயன்படுத்தப்பட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் தங்கள் பார்வையை முழுமையாக கார்த்திகேயன் பக்கம் திருப்பி அவரை தேடினார்கள்.

இதில் மதுரையில் பதுங்கி இருப்பதை அறிந்த தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று அவரை சுற்றிவளைத்து பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், தனது தாய் சீனியம்மாளின் அரசியல் வாழ்க்கையை பாழாக்கிய ஆத்திரத்தில் உமாமகேசுவரியையும், அவருடைய கணவர் முருகசங்கரன் மற்றும் பணிப்பெண் மாரியையும் கொலை செய்துவிட்டு நகை-பணத்தை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டதாக போலீசாரிடம் அவர் தெரிவித்தார். பின்னர் அவரை போலீசார் கைது செய்தனர்.

நடித்து காட்டினார்

இதைத்தொடர்ந்து போலீசார், நெல்லையில் உள்ள உமாமகேசுவரியின் வீட்டிற்கு நேற்று கார்த்திகேயனை அழைத்து வந்தனர். அங்கு அவர், உமாமகேசுவரி, முருகசங்கரன் மற்றும் மாரியை எப்படி கொலை செய்தார்? என்று நடித்துக்காட்டினார். மேலும், நகைகளை திருடியதையும், பீரோவில் இருந்த பொருட்களை சிதறிப்போட்டுவிட்டு, தடயங்களை அழித்ததையும் செய்து காட்டினார். அதை போலீசார் வீடியோவில் பதிவு செய்து கொண்டனர்.

தொடர்ந்து பாளையங்கோட்டை ஆயுதப்படைக்கு அழைத்து செல்லப்பட்ட அவரிடம் மாநகர போலீஸ் கமிஷனர் பாஸ்கரன் விசாரணை நடத்தினார்.

21 பவுன் நகை மீட்பு

முன்னதாக கார்த்திகேயனிடம் போலீசார் நடத்திய விசாரணையில், உமாமகேசுவரி வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட நகை மற்றும் கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை நெல்லை தாமிரபரணி ஆற்றில் வீசிவிட்டதாக கூறினார். அதன்பேரில், போலீசார் அங்கு சென்று அவற்றை தேடினர். ஆனால், அவை கிடைக்கவில்லை.

எனவே, கார்த்திகேயனிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர், நகை மற்றும் ஆயுதங்களை நெல்லை சாந்திநகரில் உள்ள தனது வீட்டில் பதுக்கி வைத்து இருப்பதாக தெரிவித்தார். உடனே, போலீசார் அவரை நேற்று அங்கு அழைத்துச்சென்றனர். அங்கு ஒரு இடத்தில் அவற்றை பதுக்கி வைத்து இருந்ததை அவர் காட்டினார். அந்த இடத்தில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அங்கு ஒரு பையில் இருந்த 6 ஜோடி தங்க வளையல்கள், ஒரு தங்க காப்பு, ஒரு ஜோடி கம்மல் மற்றும் 2 சங்கிலி உள்ளிட்ட மொத்தம் 21 பவுன் நகைகளை போலீசார் மீட்டனர். மேலும், அந்த பையில் இருந்த ரத்தக்கறை படிந்த கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. அங்கிருந்து சில ஆவணங்களையும் போலீசார் கைப்பற்றியதாக கூறப்படுகிறது. அது தொடர்பாகவும் கார்த்திகேயனிடம் விசாரணை நடத்தப்பட்டது.

சி.பி.சி.ஐ.டி. விசாரணை

இதற்கிடையே, 3 பேர் கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றி தமிழக அரசு நேற்று முன்தினம் உத்தரவிட்டது. அதன்படி, சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், துணை போலீஸ் சூப்பிரண்டு அனில்குமார், இன்ஸ்பெக்டர் பிறைச்சந்திரன் ஆகியோர் தலைமையிலான போலீசார் நேற்று நெல்லை வந்து தங்கள் விசாரணையை தொடங்கினார்கள்.

இதற்காக கொலை செய்யப்பட்ட உமாமகேசுவரியின் வீட்டிற்கு நேரில் சென்று ஒவ்வொரு அறைகளாக பார்வையிட்டு அங்கிருந்த தடயங்களை ஆய்வு செய்தனர். சுமார் 40 நிமிட ஆய்வுக்கு பின்னர் இந்த கொலை குறித்து உறவினர்களிடமும், நெல்லை மாநகர போலீசாரிடமும் விசாரணை நடத்தினார்கள். மேலும், இந்த கொலைகள் தொடர்பாக கார்த்திகேயனின் தாயார் சீனியம்மாளிடமும் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்து உள்ளனர். தி.மு.க. பிரமுகர்கள் வேறு யாருக்காவது இந்த சம்பவத்தில் தொடர்பு உள்ளதா? அல்லது வேறு யாராவது இந்த கொலைக்கு உடந்தையாக இருந்தார்களா? என்றும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story