ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவிலில் இன்று ஆடி அமாவாசை திருவிழா பக்தர்கள் குவிந்தனர்


ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவிலில் இன்று ஆடி அமாவாசை திருவிழா பக்தர்கள் குவிந்தனர்
x
தினத்தந்தி 31 July 2019 3:00 AM IST (Updated: 31 July 2019 12:42 AM IST)
t-max-icont-min-icon

ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா இன்று (புதன்கிழமை) நடக்கிறது. இதையொட்டி கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்.

ஏரல், 

ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா இன்று (புதன்கிழமை) நடக்கிறது. இதையொட்டி கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்.

சேர்மன் அருணாசலசாமி கோவில்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவிலில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசை திருவிழா 12 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு ஆடி அமாவாசை திருவிழா கடந்த 22-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழா நாட்களில் தினமும் இரவில் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா சென்று, பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மேலும் வில்லிசை, பொம்மலாட்டம், பரதநாட்டியம், பக்தி இன்னிசை போன்றவை நடக்கிறது.

இன்று, ஆடி அமாவாசை திருவிழா

10-ம் நாளான இன்று (புதன்கிழமை) ஆடி அமாவாசை திருவிழா நடக்கிறது. மதியம் 1.30 மணிக்கு சுவாமி உருகுபலகையில் கற்பூரவிலாசம் வரும் காட்சி, சிறப்பு அபிஷேகம், மாலை 4.30 மணிக்கு இலாமிச்சவேர் சப்பரத்தில் சேர்மத் திருக்கோலம், இரவு 10 மணிக்கு கற்பகப் பொன் சப்பரத்தில் எழுந்தருளல் நடக்கிறது.

விழாவை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் கார், வேன், பஸ்களில் கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர். கோவில் வளாகம், தாமிரபரணி ஆற்றங்கரையில் ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் தங்கியிருந்து வழிபடுகின்றனர். பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளது.

பச்சை சாத்தி அபிஷேகம்

11-ம் நாளான நாளை (வியாழக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு வெள்ளைசாத்தி தரிசனம், காலை 9 மணிக்கு பச்சை சாத்தி அபிஷேகம், மதியம் 1 மணிக்கு பச்சை சாத்தி தரிசனம், மாலை 6 மணிக்கு ஏரல் சவுக்கை முத்தாரம்மன் கோவில் பந்தலில் தாகசாந்தி, இரவு 10.30 மணிக்கு சுவாமி மூலஸ்தானம் சேரும் ஆனந்தகாட்சி, திருக்கற்பூர தீபதரிசனம் நடக்கிறது.

விழாவின் நிறைவு நாளான நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 8 மணிக்கு தீர்த்தவாரி, தாமிரபரணி நதியில் சகலநோய் தீர்க்கும் திருத்துறையில் நீராடல், மதியம் 12.30 மணிக்கு அன்னதானம், மாலை 3 மணிக்கு ஆலிலை சயன அலங்காரம், மாலை 6 மணிக்கு ஊஞ்சல்சேவை, இரவு 9 மணிக்கு திருவருள்புரியும் மங்களதரிசனம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அக்தார் அ.ரா.க.அ.கருத்தப்பாண்டிய நாடார் செய்து வருகிறார்.

Next Story