அரிய கடல்வாழ் உயிரினங்களை பாதுகாப்பது குறித்து பயிற்சி கலெக்டர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்


அரிய கடல்வாழ் உயிரினங்களை பாதுகாப்பது குறித்து பயிற்சி கலெக்டர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 31 July 2019 4:00 AM IST (Updated: 31 July 2019 12:46 AM IST)
t-max-icont-min-icon

அழிந்து வரும் அரிய கடல்வாழ் உயிரினங்களை பாதுகாப்பது தொடர்பான பயிற்சியை கலெக்டர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி, 

அழிந்து வரும் அரிய கடல்வாழ் உயிரினங்களை பாதுகாப்பது தொடர்பான பயிற்சியை கலெக்டர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்.

பயிற்சி

மன்னார் வளைகுடா தேசிய கடற்பூங்கா, மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக அறக்கட்டளை, தூத்துக்குடி சுகந்தி தேவதாசன் கடல் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை சார்பில், மன்னார் வளைகுடா பகுதியில் அழிந்து வரும் அரிய கடல்வாழ் உயிரினங்களை அடையாளம் கண்டறிதல் மற்றும் பாதுகாப்பது குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கான பயிற்சி தூத்துக்குடியில் நேற்று காலை நடந்தது.

மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக வனபாதுகாவலர் அசோக்குமார் தலைமை தாங்கினார். மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக அறக்கட்டளை இயக்குனர் தின்கர் குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் பாலகோபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி கலந்து கொண்டு, பாதுகாக்கப்பட்ட உயிரினங்கள் குறித்த விழிப்புணர்வு போஸ்டரை வெளியிட்டு, பயிற்சியை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

4 ஆயிரத்து 200 உயிரினங்கள்

இந்தியாவிலேயே அதிக பல்லுயிர் பெருக்கம் காணப்படும் மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது. தமிழகத்தில் திண்டுக்கல் முதல் கன்னியாகுமரி வரையிலான மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பகம் ஆகியவற்றில் ஏராளமான விலங்குகள், தாவரங்கள் மற்றும் பல்வேறு உயிரினங்கள் காணப்படுகின்றன. மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பகத்தில் சுமார் 4 ஆயிரத்து 200 உயிரினங்கள் காணப்படுகின்றன. இந்த விலங்குகள் மட்டுமின்றி, பவளப்பாறைகள், அலையத்தி காடுகளும் உள்ளன.

10 ஆண்டுகளுக்கு முன்பு இந்த உயிரினங்கள் வியாபார நோக்கில் அதிகளவில் பிடிக்கப்பட்டு அழிவை நோக்கி சென்றன. இதனால் பல்வேறு உயிரினங்கள் வேட்டையாட தடை விதிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த உயிரினங்கள் பற்றி அனைத்து துறை அதிகாரிகளும் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். எந்தெந்த உயிரினங்கள் வேட்டையாட தடை செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டது, விதிமுறை மீறி வேட்டையாடுபவர்களுக்கு என்ன தண்டனை என்பன உள்ளிட்ட விவரங்களை அறிந்து கொள்ள இந்த பயிற்சி வாய்ப்பாக இருக்கும். இதனை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நடவடிக்கை

மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக அறக்கட்டளை இயக்குனர் தின்கர் குமார் பேசும்போது, மன்னார் வளைகுடா பகுதியில் ஏராளமான அரியவகை உயிரினங்கள் உள்ளன. இந்த பகுதியில் ஏராளமான மீனவ கிராமங்கள் உள்ளன. இதனால் பாதுகாக்கப்பட்ட உயிரினங்களை பாதுகாப்பது சவால் நிறைந்ததாக உள்ளது. அரிய கடல்வாழ் உயிரினங்கள் கடத்தப்படும்போது அவற்றை போலீசார், கடலோர காவல்படை, கடலோர பாதுகாப்பு போலீசார் பிடித்து வருகின்றனர். அவ்வாறு பிடிக்கும்போது, அந்த உயிரினம் பாதுகாக்கப்பட்டதா? என்பதை அடையாளம் காணுவதில் சிரமம் ஏற்படுகிறது. இதனால் போலீசார் மற்றும் அதிகாரிகளுக்கு கடல் உயிரினங்களை அடையாளம் காணுவது தொடர்பாக பயிற்சி அளிக்கப்படுகிறது. மன்னார் வளைகுடா உயிர்க்கோள பகுதியில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிரினங்கள் உள்ளன. இதில் 24 உயிரினங்கள் பாதுகாக்கப்பட்ட உயிரினமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த உயிரினங்களை பதுக்கி வைத்து இருந்தால், உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

பயிற்சியில் சுங்கத்துறை, கடலோர காவல்படை, கடலோர பாதுகாப்பு போலீசார், போலீசார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சுகந்தி தேவதாசன் கடல் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் பேட்டர்சன் எட்வர்டு நன்றி கூறினார்.

Next Story