தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு படகில் பீடி இலைகள் கடத்தல் தூத்துக்குடியை சேர்ந்த 6 பேர் கைது


தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு படகில் பீடி இலைகள் கடத்தல் தூத்துக்குடியை சேர்ந்த 6 பேர் கைது
x
தினத்தந்தி 30 July 2019 9:30 PM GMT (Updated: 30 July 2019 7:22 PM GMT)

தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு பீடி இலைகளை கடத்தியதாக தூத்துக்குடியை சேர்ந்த 6 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

தூத்துக்குடி, 

தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு பீடி இலைகளை கடத்தியதாக தூத்துக்குடியை சேர்ந்த 6 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

தீவிர கண்காணிப்பு

தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு அவ்வப்போது பீடி இலைகள் உள்ளிட்டவை கடத்தப்பட்டு வருவதால், இருநாடுகளின் பாதுகாப்பு பிரிவினரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி நேற்று முன்தினம் இலங்கை கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது இலங்கை புத்தளம் தளவிலா ஆலயத்தில் இருந்து வடகிழக்கே சுமார் 22 கடல்மைல் தொலைவில் சந்தேகத்துக்கு இடமான முறையில் ஒரு படகு நிற்பதை கடற்படையினர் கண்டுபிடித்தனர். உடனடியாக அவர்கள் அங்கு விரைந்து சென்றனர்.

6 பேர் கைது

அங்கு தமிழகத்தை சேர்ந்த நாட்டுப்படகு நின்று கொண்டு இருந்தது. அதில் 6 மீனவர்கள் இருந்தனர். தொடர்ந்து கடற்படையினர் அந்த படகில் சோதனை செய்தனர். அப்போது, படகின் உள்பகுதியில் 74 மூட்டைகளில் 2 ஆயிரத்து 379 கிலோ பீடி இலைகள் பதுக்கி வைத்து கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.

இதுதொடர்பாக கடற்படையினர் படகில் இருந்த தூத்துக்குடி மாவட்டம் வைப்பாரை சேர்ந்த 6 பேரையும் கைது செய்தனர். மேலும் படகு மற்றும் பீடி இலை மூட்டைகளை பறிமுதல் செய்து புத்தளம் போலீசில் ஒப்படைத்தனர். கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வேதாளை பகுதியில் இருந்து நாட்டுப்படகில் பீடி இலைகளை கடத்தி சென்றது தெரியவந்தது. கைதான 6 பேரும் கல்பிட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

27 டன் பீடி இலைகள்

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் தமிழகத்தில் இருந்து கடல் வழியாக கடத்தி வரப்பட்ட 27 டன் பீடி இலைகள் இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து தூத்துக்குடி உளவுப்பிரிவு போலீசார் இலங்கையில் கைது செய்யப்பட்ட மீனவர்களின் விவரங்களை சேகரித்து வருகிறார்கள்.

Next Story