தொழில் அதிபர் சித்தார்த் மாயம்: அரசியல் கட்சி தலைவர்கள் அதிர்ச்சி
தொழில் அதிபரும், முன்னாள் முதல்-மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகனுமான சித்தார்த் மாயமானது பற்றி அறிந்த அரசியல் கட்சி தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பெங்களூரு,
தொழில் அதிபரும், முன்னாள் முதல்-மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகனுமான சித்தார்த் மாயமானது பற்றி அறிந்த அரசியல் கட்சி தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சமூக பணிகள்
முன்னாள் முதல்-மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகனும், தொழில் அதிபருமான சித்தார்த் திடீரென மாயமாகியுள்ளார். அவரை தேடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. அரசியல் கட்சிகளின் தலைவர்கள் எஸ்.எம்.கிருஷ்ணாவை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி தேற்றி வருகிறார்கள். இந்த நிலையில் முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, எஸ்.எம்.கிருஷ்ணாவை சதாசிவநகரில் உள்ள அவரது வீட்டில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் சித்தராமையா நிருபர்களிடம் கூறியதாவது:-
சித்தார்த் ஒரு சிறந்த தொழிலதிபர். நேரடியாகவும், மறைமுகமாகவும் 1 லட்சம் பேருக்கு அவர் வேலை வாய்ப்புகளை வழங்கினார். அவர் திடீரென மாயமாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை நம்ப முடியவில்லை. பல்வேறு சமூக பணிகளை அவர் செய்துள்ளார். ஆனால் அவர் எப்போதும் பிரசாரத்தை விரும்பியது இல்லை. வருமான வரித்துறையினர் அவருக்கு தொல்லை கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. வருமான வரித்துறையினர், தவறு இல்லை என்றாலும் சோதனைகளை நடத்தி தொல்லை கொடுப்பதாகத்தான் நாங்கள் பார்க்கிறோம்.
இவ்வாறு சித்தராமையா கூறினார்.
மிகுந்த வேதனை
பா.ஜனதாவை சேர்ந்த முன்னாள் துணை முதல்-மந்திரி ஆர்.அசோக் எம்.எல்.ஏ. பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
தொழில் அதிபர் சித்தார்த், மர்மமான முறையில் மாயமாகி இருப்பது எனக்கு அதிர்ச்சியை தந்துள்ளது. இதை நம்ப முடியவில்லை. என்ன காரணத்திற்காக இந்த சம்பவம் நடந்துள்ளது என்பது மக்களுக்கு தெரிய வேண்டும். அவரது குடும்பத்தினர் விரும்பினால், எத்தகைய விசாரணைக்கும் நாங்கள் தயார். இதுகுறித்து முதல்-மந்திரி எடியூரப்பாவுடன் ஆலோசனை நடத்துவேன். எனக்கு மிகுந்த வேதனை ஏற்பட்டுள்ளது.
எனக்கு கடந்த பல ஆண்டுகளாக சித்தார்த் நண்பர். பல்வேறு தொழில்களை செய்து வெற்றி கண்டவர். அவரது கடன்களை பார்க்கும்போது, சொத்து மதிப்பு அதிகமாக உள்ளது. அவர் பாதுகாப்புடன் திரும்ப வேண்டும் என்று நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம். சட்டசபை புதிய சபாநாயகராக விசுவேஸ்வர ஹெக்டே காகேரி போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படுவது உறுதி.
இவ்வாறு ஆர்.அசோக் கூறினார்.
நம்ப முடியவில்லை
பா.ஜனதாவை சேர்ந்த சி.டி.ரவி எம்.எல்.ஏ., “சித்தார்த் எனது 30 ஆண்டுகால நண்பர். சிறந்த தொழில் அதிபர். சித்தார்த்தை பார்த்து கற்று கொள்ளுங்கள் என்று சிக்கமகளூரு மாவட்டத்தில் சொல்வார்கள். அத்தகையவர் திடீரென மாயமாகி இருப்பது அதிர்ச்சியை தந்துள்ளது. இதை நம்ப முடியவில்லை. அவர் பாதுகாப்பாக திரும்ப வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்“ என்றார்.
முன்னாள் மந்திரி டி.கே.சிவக்குமார் இதுபற்றி பேசும்போது, “சித்தார்த் எனது நீண்டகால நண்பர். சிறந்த தொழில் அதிபர். அவர் எனக்கு கடந்த 28-ந் தேதி செல்போனில் தொடர்பு கொண்டு பேசி, சந்திக்க விரும்புவதாக கூறினார். அப்போது நான் வெளியில் இருந்தேன். பெங்களூரு வந்து சந்திக்கலாம் என்று கூறினேன். ஆனால் இப்போது மர்மமான முறையில் அவர் மாயமாகி இருப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை நம்ப முடியவில்லை. அவரை பற்றி வெளியாகும் தகவல்களை நம்ப முடியவில்லை. முழுமையான விசாரணையை நடத்த வேண்டும். உண்மையை கண்டறிய வேண்டும்“ என்றார்.
Related Tags :
Next Story