திருமணத்திற்கு பெற்றோர் மறுத்ததால் வீட்டைவிட்டு வெளியேறினர்: போலீஸ் உதவியுடன் கரம் பிடித்த காதல் ஜோடி


திருமணத்திற்கு பெற்றோர் மறுத்ததால் வீட்டைவிட்டு வெளியேறினர்: போலீஸ் உதவியுடன் கரம் பிடித்த காதல் ஜோடி
x
தினத்தந்தி 30 July 2019 10:00 PM GMT (Updated: 30 July 2019 8:52 PM GMT)

திருமணத்திற்கு பெற்றோர் மறுத்ததால், வீட்டைவிட்டு வெளியேறிய காதல் ஜோடி போலீஸ் உதவியுடன் திருமணம் செய்து கொண்ட சம்பவம் தார்வார் டவுனில் நடந்து உள்ளது.

உப்பள்ளி, 

திருமணத்திற்கு பெற்றோர் மறுத்ததால், வீட்டைவிட்டு வெளியேறிய காதல் ஜோடி போலீஸ் உதவியுடன் திருமணம் செய்து கொண்ட சம்பவம் தார்வார் டவுனில் நடந்து உள்ளது.

திருமணத்திற்கு மறுப்பு

ராய்ச்சூர் டவுனை சேர்ந்தவர் மாருதிசிங்(வயது 35). இவருக்கும் அப்பகுதியை சேர்ந்த பாரதி வாலி(28) என்ற பெண்ணுக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. பழகிய சில நாட்களிலேயே அவர்கள் 2 பேரும் காதலிக்க ஆரம்பித்தனர். மேலும் காதல் ஜோடி பல்வேறு இடங்களுக்கு சென்று தங்களின் காதலை வளர்த்தனர்.

இந்த நிலையில் மாருதிசிங், பாரதி வாலியின் காதல் பற்றி இருவீட்டாருக்கும் தெரியவந்தது. திருமணத்திற்கு 2 குடும்பத்தினரும் மறுத்து விட்டனர். மேலும் இருவருக்கும் வேறு இடத்தில் திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு எடுத்தனர். ஆனாலும் தங்களின் காதலில் உறுதியாக இருந்த காதல் ஜோடி வீட்டைவிட்டு வெளியேறியது.

போலீசார் வாழ்த்து

மேலும் தார்வாருக்கு வந்த மாருதிசிங்கும், பாரதி வாலியும் தார்வார் டவுனில் உள்ள சமூக நலத்துறை அலுவலகத்திற்கு சென்று தங்களின் காதல் பற்றி தெரிவித்தனர். இதுபற்றி சமூக நலத்துறை அதிகாரிகள், தார்வார் டவுன் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து சமூக நலத்துறை அலுவலகத்திற்கு சென்ற போலீசார், மாருதிசிங், பாரதி வாலியிடம் விசாரித்தனர். அப்போது அவர்கள் திருமணத்திற்கு பெற்றோர் மறுத்து விட்டதால் வீட்டைவிட்டு வெளியேறியதாகவும், எங்கள் 2 பேருக்கும் திருமண வயது பூர்த்தி அடைந்து விட்டதாகவும் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க போலீசார் முன்வந்தனர். அதன்படி தார்வார் டவுன் தாசில்தார் அலுவலக வளாகத்தில் உள்ள ஸ்ரீலட்சுமி கோவிலில், போலீசார் முன்னிலையில் மாருதிசிங், பாரதி வாலி திருமணம் நடந்தது. புதுமண தம்பதிகளை போலீசாரும், தாசில்தார் அலுவலக ஊழியர்களும் வாழ்த்தி சென்றனர்.

Next Story