அ.தி.மு.க.விடமிருந்து சிறுபான்மை மக்களை பிரிக்க நினைக்கும் சூழ்ச்சி பலிக்காது - துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு


அ.தி.மு.க.விடமிருந்து சிறுபான்மை மக்களை பிரிக்க நினைக்கும் சூழ்ச்சி பலிக்காது - துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு
x
தினத்தந்தி 30 July 2019 10:45 PM GMT (Updated: 30 July 2019 11:23 PM GMT)

அ.தி.மு.க.விடமிருந்து சிறுபான்மை மக்களை பிரிக்க நினைக்கும் சூழ்ச்சி பலிக்காது என்று வேலூரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

வேலூர்,

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து நேற்று இரவு வேலூர் கோட்டை சுற்றுச்சாலையில் தேர்தல்பிரசார கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமை தாங்கினார். அமைச்சர் கே.சி.வீரமணி வரவேற்றார்.

வேட்பாளர் ஏ.சி.சண்முகம் வாக்குகள் கேட்டு பேசினார். அவரைத்தொடர்ந்து துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார். அவர் பேசியதாவது:-

இந்ததொகுதியில் போட்டியிடும் ஏ.சி.சண்முகம் உங்களுக்கு நன்கு அறிமுகமானவர். இங்கு நான் வரும் வழியெல்லாம் இருந்த கூட்டத்தை பார்க்கும்போது ஏ.சி.சண்முகம் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவது உறுதியாகிவிட்டது. எம்.ஜி.ஆருக்கு பிறகு 27 ஆண்டுகள் கழகத்தை அழிப்பதற்காக நடந்த பல்வேறு சோதனைகள், சூழ்ச்சிகளை ஜெயலலிதா முறியடித்தார். இப்போது எந்த கொம்பனாலும் அசைக்கமுடியாத 1½ கோடி தொண்டர்களை கொண்ட இயக்கமாக அ.தி.மு.க. உள்ளது.

18 வருடம் ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்துள்ளார். இப்போதும் அவருடைய ஆட்சி தொடர்கிறது. ஒரு இயக்கம் 28 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தது என்றால் அது அ.தி.மு.க.தான்.

அ.தி.மு.க.வில் ஒரு தொண்டன் முதல்-அமைச்சராக வரலாம், சட்டமன்ற உறுப்பினராக, நாடாளுமன்ற உறுப்பினராக, அமைச்சராக வரலாம். தி.மு.க.வில் வரமுடியுமா?. கருணாநிதி, அவருக்கு பிறகு ஸ்டாலின், இப்போது அவருடைய மகன்.

சாதாரண தொண்டனும் பதவிக்கு வரக்கூடிய இயக்கம் அ.தி.மு.க. அதனால்தான் சிலநேரம் வீழ்ந்தாலும் எழுந்து நிற்கிறோம். குடிசை பகுதிகளில் வாழும் 12 லட்சம் மக்கள் கணக்கெடுக்கப்பட்டு அவர்களில் 6 லட்சம் பேருக்கு கான்கிரீட் வீடு கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது. 2023-க்குள் தமிழ்நாடு குடிசைகளே இல்லாத மாநிலமாக மாற்றப்படும்.

விவசாயத்தை பொறுத்தவரையில் கடந்த 3 வருடங்களாக நெல்உற்பத்தி, தொழில் வளர்ச்சியில் முதலிடம் வகித்து வருகிறோம். தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தி ரூ.350 லட்சம் கோடி முதலீடுசெய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதில்தான் மின்சாரத்தில் இயங்கும் கார் உற்பத்தி செய்யப்பட்டு முதல்-அமைச்சர் தொடங்கிவைத்துள்ளார்.

பள்ளி கல்வித்துறைக்கு ரூ.34 ஆயிரம் கோடியை ஜெயலலிதா ஒதுக்கி தந்தார். அதனால்தான் இன்று அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து, தேர்ச்சி சதவீதமும் அதிகரித்து கல்வியில் 2-வது இடத்தில் இருக்கிறோம்.

பொங்கல் பரிசாக அனைவருக்கும் ரூ.1000 கொடுத்தோம், பெண்களுக்கு ஸ்கூட்டி வாங்குவதற்கு மானியம் வழங்கப்படுகிறது. மகப்பேறு நிதி ரூ.12 ஆயிரத்தில் இருந்து ரூ.18 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில் வழங்கப்பட்ட 4 கிராம் தங்கம் 8 கிராமாக உயர்த்தி வழங்கப்படுகிறது.

ஸ்டாலின் பொய்சொல்லி தற்காலிகமாக வெற்றிபெற்றுள்ளார். அதிலும் தமிழகத்தை ஆட்சிசெய்யும் சக்தி அ.தி.மு.க.வுக்குதான் உள்ளது என்பதை மக்கள் நிரூபித்து இருக்கிறார்கள். மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சிபோய்விடும் என்று நினைத்தார். அது நடக்கவில்லை. இப்போது திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.18 ஆயிரம்கோடி திரும்பி சென்றுவிட்டதாக கூறுகிறார்.

எந்த அரசாக இருந்தாலும் திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவார்கள். சில காரணங்களால் பணிகள் தாமதமாகலாம். அதன்படிதான் ரூ.25 லட்சம் கோடிக்கு திட்டமிட்டு நிதி ஒதுக்கப்பட்டது. அதில் சில திட்டங்களுக்கான நிதி மிச்சமானது. அந்த நிதி அரசு கஜானாவில் சேர்க்கப்பட்டு, அடுத்த ஆண்டு நடக்கும் திட்டங்களுக்குசெலவு செய்யப்படும். இதுதான் 2018-ல் நடந்தது.

இதைவைத்து இந்த அரசு செயல்படாத அரசு என்று ஸ்டாலின் பேசிவருகிறார். ஸ்டாலின் திரும்பி பார்க்கவேண்டும். அவருடைய முதுகில் எவ்வளவு அழுக்கு உள்ளது என்று. உங்களுடைய ஆட்சி காலத்தில் 2010-ல் ரூ.8 ஆயிரத்து 848 கோடி திரும்ப பெறப்பட்டது.

2006 முதல் 2011 வரை உங்களுடைய ஆட்சி காலத்தில் மின்தட்டுப்பாட்டை நீக்கமுடிந்ததா? கொலை, கொள்ளை, கற்பழிப்பு நடந்ததாக கூறுகிறார். நீங்கள்தான் மாமன், மச்சான் சண்டையில் தீ வைத்தீர்கள். அதில் 3 பேர் கொல்லப்பட்டார்கள்.

ஸ்டாலினுக்கு ஒரே கனவு முதல்-அமைச்சராவதுதான். மத்தியிலும், மாநிலத்திலும் தங்களுடைய ஆட்சி வந்துவிடும் என்று பகல்கனவு கண்டார். எந்த காலத்திலும் ஸ்டாலின் முதல்-அமைச்சராக முடியாது. இதை தமிழக மக்கள் முடிவு செய்துவிட்டார்கள்.

அனைத்து மக்களும் ஒருதாய் மக்களாக ஜாதி, மத வேறுபாடின்றி, சாதி சண்டையின்றி வாழ்கிறோம். என்ன சூழ்ச்சி செய்தாலும் பிரிக்கமுடியாது. உலமாக்களுக்கு எம்.ஜி.ஆர். பென்ஷன் வழங்கினார். ரம்ஜானுக்கு 3 ஆயிரம் பள்ளிவாசல்களுக்கு 4500 மெட்ரிக் டன் அரிசி வழங்கப்படுகிறது. ஹஜ் பயணிகளுக்கு வழங்கப்பட்ட நிதியை மத்திய அரசு நிறுத்தியபோது ஜெயலலிதா தொடர்ந்து வழங்கினார்.

இஸ்லாமிய பெண்கள் சிறுதொழில் தொடங்குவதற்கு ரூ.20 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. ஜூன் 5-ந் தேதி காயிதேமில்லத் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. எனவே அ.தி.மு.க. விடமிருந்து சிறுபான்மை மக்களை பிரிக்க நினைக்கும் சூழ்ச்சி பலிக்காது.

வேலூர் தொகுதி தேர்தல் எதற்காக நிறுத்தப்பட்டது என்று அனைவருக்கும் தெரியும். நாடாளுமன்றத்திற்கு ஏ.சி.சண்முகத்தை அனுப்பினால் அவருடைய குரல் ஒலிக்கும். அவருக்கு வெற்றி சின்னமான இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அவரை வெற்றிபெறச்செய்யுங்கள்.

இவ்வாறு அவர்பேசினார்.

கூட்டத்தில் அமைச்சர்கள் கே.சி.வீரமணி, வெல்லமண்டி நடராஜன், கருப்பண்ணன், ராதாகிருஷ்ணன், பாஸ்கர், வளர்மதி, முன்னாள் அமைச்சர் விஜய், முகமதுஜான் எம்.பி. மற்றும் பலர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் மூர்த்தி நன்றி கூறினார்.

முன்னதாக பேரணாம்பட்டு பஸ் நிலைய பகுதியில் வேலூர் நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் துணை முதல் - அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு பேசினார். கூட்டத்தில் அமைச்சர்கள் தங்கமணி, கே.சி.வீரமணி, சேவூர் ராமச்சந்திரன், சரோஜா, எம்.பி.க்கள் வைத்தியலிங்கம், முகம்மதுஜான், ஒன்றிய செயலாளர்கள் பிரபாகரன், ராமு, நகர செயலாளர்கள் சீனிவாசன், பழனி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story