தேனி அருகே அனுமதியின்றி, வைகை ஆற்றுக்குள் அமைத்த உறைகிணறு மூடப்பட்டது - கலெக்டர் உத்தரவால் அதிரடி


தேனி அருகே அனுமதியின்றி, வைகை ஆற்றுக்குள் அமைத்த உறைகிணறு மூடப்பட்டது - கலெக்டர் உத்தரவால் அதிரடி
x
தினத்தந்தி 1 Aug 2019 10:45 PM GMT (Updated: 1 Aug 2019 11:37 PM GMT)

தேனி அருகே வைகை ஆற்றுக்குள் அனுமதியின்றி அமைக்கப்பட்ட உறைகிணறு மூடப்பட்டது. கலெக்டர் உத்தரவால் அதிகாரிகள் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டனர்.

தேனி,

வைகை ஆற்றில் பல்வேறு இடங்களில் அனுமதியின்றி கிணறுகள் வெட்டியும், உறை கிணறுகள் அமைத்தும், ஆழ்துளை கிணறுகள் அமைத்தும் திருட்டுத்தனமாக தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் விவசாயிகள் புகார்கள் தெரிவித்து வந்தனர். ஆனாலும், அதற்கான தீர்வு கிடைக்காமல் இருந்தது.

அதேபோன்று, தேனி அருகே பள்ளப்பட்டியில் வைகை ஆற்றுக்குள் அனுமதியின்றி ஒருவர் தனது தோட்டத்துக்கு தண்ணீர் எடுப்பதற்காக உறை கிணறு அமைத்து இருந்தார். இதுகுறித்து கடந்த 29-ந்தேதி பள்ளப்பட்டியை சேர்ந்த விவசாயிகள் சிலர், மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவிடம் உறைகிணறை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்தனர்.

இதையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகளை கண்டித்த கலெக் டர், 2 நாட்களுக்குள் அவற்றை இடித்து அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டார். கலெக்டர் உத்தரவின்பேரில், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் கணேசமூர்த்தி தலைமையில், கிராம நிர்வாக அலுவலர் காந்தி மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்கள் நேற்று பள்ளப்பட்டி வைகை ஆற்றுக்கு சென்றனர். அங்கு ஆற்றுக்குள் அனுமதியின்றி அமைத்து இருந்த உறை கிணற்றை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்தும், உறைகிணற்றுக்குள் மண்ணை அள்ளிப் போட்டும் மூடினர்.

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘கலெக்டர் உத்தரவின்பேரில் இந்த உறைகிணறு மூடப்பட்டு உள்ளது. மேலும் எங்கெல்லாம் அனுமதியின்றி உறைகிணறுகள் அமைக்கப்பட்டு உள்ளதோ அவற்றை எல்லாம் கண்டறிந்து மூட நடவடிக்கை எடுக்கப் படும். பள்ளப்பட்டியில் பள்ளி ஆசிரியர் ஒருவரால் இந்த உறைகிணறு அமைக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. அவர் மீது தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. உயர் அதிகாரிகளிடம் கலந்து ஆலோசித்து மேல் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.

Next Story