தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், ரூ.12 கோடியில் 250 படுக்கைகளுடன் கூடுதல் பிரசவ வார்டு கட்டிடம் - கட்டுமான பணிகள் தீவிரம்

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.12 கோடி மதிப்பீட்டில் 250 படுக்கைகளுடன் கூடிய நவீன பிரசவ வார்டு கூடுதல் கட்டிடம் கட்டப்படுகிறது. இதன் கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஆண்டிப்பட்டி,
தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தேனி, திண்டுக்கல் மாவட்டத்தினர் மற்றும் கேரள மாநிலத்தை சேர்ந்த மக்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். அனைத்து வசதிகளுடன் கூடிய இந்த மருத்துவமனையில் ஒருநாளைக்கு 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் புறநோயாளிகளாக வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் ஒரு மாதத்திற்கு 700 முதல் 750 பிரசவங்கள் நடைபெறுகிறது.
இதில் 300-க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சை பிரசவங் களும் நடக்கிறது. பிரசவ வார்டு சிறப்பாக செயல்படுவதால் அனைத்து தரப்பு மக்களும் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரசவங்களுக்காக வருகின்றனர். ஆனால் இங்கு, பிரசவ வார்டில் 130 படுக்கைகள் மட்டுமே உள்ளதால், பெரும்பாலான தாய்மார்களை படுக்கை வசதி இன்றி, தரையில் படுக்க வைக்கும் நிலை உள்ளது.
எனவே அதிக பிரசவங்கள் நடைபெறும் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிக படுக்கைகளுடன் கூடிய கூடுதல் கட்டிடம் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதனையடுத்து ரூ.12 கோடி மதிப்பீட்டில் 250 படுக்கை வசதிகளுடன் கூடிய கூடுதல் பிரசவ வார்டு கட்டிடம் கட்ட அரசு நிதி ஒதுக்கீடு செய்தது. இதனையடுத்து புதிய பிரசவ வார்டு கட்டிடத்தின் கட்டுமான பணிகள் தொடங்கி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் ராஜேந்திரன் கூறும்போது, 4 மாடிகளை கொண்ட இந்த கட்டிடத்தின் கட்டுமான பணிகள் விரைவில் முடிந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும். இந்த கட்டிடம் பயன்பாட்டிற்கு வந்தால் பிரசவ வார்டில் தற்போது உள்ள இடப்பற்றாக்குறை தீருவதுடன், பிரசவங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது என்றார்.
Related Tags :
Next Story






