தேனியில், சத்துணவு ஊழியர்களுக்கு சமையல் போட்டி


தேனியில், சத்துணவு ஊழியர்களுக்கு சமையல் போட்டி
x
தினத்தந்தி 2 Aug 2019 10:45 PM GMT (Updated: 2 Aug 2019 5:51 PM GMT)

தேனியில் சத்துணவு ஊழியர்களுக்கு பாதுகாப்பான மற்றும் சத்தான உணவு தயார் செய்வது குறித்து சமையல் போட்டி நடந்தது.

தேனி,

தேனி அல்லிநகரம் நகராட்சி பகுதியில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மொத்தம் 19 சத்துணவு மையங்கள் உள்ளன. இந்த சத்துணவு மையங்களில் பணியாற்றும் சமையலர்கள், சத்துணவு அமைப்பாளர்களுக்கு உணவு பாதுகாப்புத்துறை சார்பில் பாதுகாக்கப்பட்ட மற்றும் சத்தான உணவு தயார் செய்வது குறித்து விழிப்புணர்வு சமையல் போட்டி, நகராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது.

இதில் சத்துணவு ஊழியர்கள் சத்தான உணவு வகைகளை சமையல் செய்து காட்சிக்காக வைத்து இருந்தனர். நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) ராஜாராம் நடுவராக இருந்து சிறந்த உணவு வகைகளை தேர்வு செய்தார். இதில் முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

போட்டிக்கான ஏற்பாடுகளை தேனி வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் பாண்டியராஜன் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர். இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறையினர் கூறுகையில், ‘இதுபோல் மாவட்டம் முழுவதும் அனைத்து நகராட்சி பகுதிகளிலும் சமையல் போட்டிகள் நடத்தப்படும். ஒவ்வொரு நகராட்சியிலும் முதல் 3 இடங்களை பிடிப்பவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களில் இருந்து மாவட்ட அளவில் 3 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். அவ்வாறு தேர்வு செய்யப்படும் 3 பேருக்கு வருகிற 15-ந்தேதி சுதந்திர தினத்தன்று மாவட்ட கலெக்டர் கையால் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்’ என்றனர்.

Next Story