முல்லைப்பெரியாற்றில் கூடுதலாக தண்ணீர் திறப்பு எதிரொலி, வைகை அணை நீர்மட்டம் 30 அடியை எட்டியது


முல்லைப்பெரியாற்றில் கூடுதலாக தண்ணீர் திறப்பு எதிரொலி, வைகை அணை நீர்மட்டம் 30 அடியை எட்டியது
x
தினத்தந்தி 2 Aug 2019 10:30 PM GMT (Updated: 2 Aug 2019 5:51 PM GMT)

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டதால், வைகை அணையின் நீர்மட்டம் 30 அடியை எட்டியது.

ஆண்டிப்பட்டி,

தேனி மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழை போதுமான அளவு பெய்யவில்லை. இதனால் வைகை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகள் மழையின்றி காய்ந்து வறட்சியாக காட்சியளிக்கிறது.

இதற்கிடையே கடந்த வாரம் முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக அணைக்கு நீர்வரத்து ஏற்பட்டு 112 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 114 அடியாக உயர்ந்தது. அதேநேரம் 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென சரிந்து 27 அடியாக காணப்பட்டது. முல்லைப்பெரியாறு அணையில் இருந்து வினாடிக்கு 100 கனஅடிவீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால் இந்த தண்ணீர் வைகை அணைக்கு முழுமையாக வந்து சேராமல் ஆங்காங்கே மின்மோட்டார் மூலம் திருடப்பட்டது. இதனால் வைகை அணைக்கு நீர்வரத்து இல்லாத நிலை ஏற்பட்டது. வைகை அணை நீர்இருப்பை கருத்தில் கொண்டு மதுரைக்கு குடிநீருக்காக திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 60 கனஅடியில் இருந்து 40 கனஅடியாக குறைக்கப்பட்டது. இதனால் வைகை அணையை மட்டுமே குடிநீருக்காக நம்பியுள்ள மதுரை மாநகரில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டது.

இந்நிலையில் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கூடுதலாக தேனி மாவட்டத்திற்கு வினாடிக்கு 300 கனஅடிவீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் வைகை அணைக்கு நீர்வரத்து ஏற்பட்டது. இதனையடுத்து வைகை அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்து கொண்டே வந்தது. தொடர் நீர்வரத்து காரணமாக கடந்த வாரம் 27 அடியாக இருந்த வைகை அணையின் நீர்மட்டம் தற்போது 30 அடியாக உயர்ந்துள்ளது. இருப்பினும் வைகை அணை மற்றும் முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்யாமல் ஏமாற்றி வருவதால் அணைகளின் நீர்மட்டம் உயர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. முல்லைப்பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த வாரம் பெய்த மழைக்கு பின்னர் தற்போது மழை பெய்யாத காரணத்தால், அங்கு நீர்வரத்து குறைந்துவிட்டது.

நேற்று காலை 6 மணி நிலவரப்படி வைகை அணையின் நீர்மட்டம் 30.12 அடியாக இருந்தது. மதுரை மற்றும் சேடப்பட்டி கூட்டுக்குடிநீர் திட்டங்களுக்காக அணையில் இருந்து வினாடிக்கு 60 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. அணையின் மொத்த நீர்இருப்பு 373 மில்லியன் கனஅடியாக இருந்தது.

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 113.65 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 108 கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 300 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது.

அணையின் மொத்த நீர்இருப்பு 1,501 மில்லியன் கனஅடியாக இருந்தது.

Next Story