திருச்சிற்றம்பலம் அருகே வாலிபரை வெட்டிக்கொன்று குளத்தில் உடல் புதைப்பு - போலீசார் விசாரணை


திருச்சிற்றம்பலம் அருகே வாலிபரை வெட்டிக்கொன்று குளத்தில் உடல் புதைப்பு - போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 3 Aug 2019 5:09 AM IST (Updated: 3 Aug 2019 5:09 AM IST)
t-max-icont-min-icon

திருச்சிற்றம்பலம் அருகே வாலிபரை வெட்டிக் கொன்று உடல் குளத்தில் புதைக்கப்பட்டு இருந்தது. கொலை செய்யப்பட்டவர் யார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சிற்றம்பலம்,

தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகே உள்ள ஆவணம் பெரியநாயகி புரத்தில் கொளக்குடி குளம் உள்ளது. இந்த குளத்தின் ஒரு பகுதியில் நேற்று 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் உடல் அரைகுறையாக புதைக்கப்பட்ட நிலையில் கிடந்தது.

இதுகுறித்து ஆவணம் பெரியநாயகிபுரம் கிராம நிர்வாக அலுவலர் விக்னேஷ் திருச்சிற்றம்பலம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் திருச்சிற்றம்பலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.

அங்கு இறந்து கிடந்தவரின் இடது கை மணிக்கட்டும், இடது காலின் பாதமும் வெட்டப்பட்டு இருந்தது. அவரை யாரோ வெட்டிக்கொன்று அவசர, அவசரமாக குளத்தில் குழி தோண்டி அரைகுறையாக புதைத்து விட்டு சென்றுள்ளனர். இறந்து கிடந்தவர் டவுசரும், கரு ஊதா நிறத்தில் டி-சர்ட்டும் அணிந்திருந்தார்.

அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்ற விவரங்கள் உடனடியாக தெரியவில்லை. இறந்து கிடந்தவரின் உடல் முழுவதும் அழுகிய நிலையில் இருந்ததால் கொலை சம்பவம் நடந்து 4 நாட்களுக்கு மேல் ஆகி இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இறந்து கிடந்தவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக பேராவூரணி அரசு மருத்துவ மனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை சம்பவம் குறித்து பட்டுக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசமூர்த்தி உத்தரவின் பேரில் பட்டுக்கோட்டை மதுவிலக்கு பிரிவு ஆய்வாளர் (பொறுப்பு) உமா, திருச்சிற்றம்பலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கர்ணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த 1 மாதத்திற்குள் 2-வது கொலை சம்பவம் நடைபெற்று உள்ளதால் திருச்சிற்றம்பலம் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.


Next Story