திருப்பத்தூர் அருகே லாரி மீது மினிவேன் மோதி 2 வாலிபர்கள் பலி


திருப்பத்தூர் அருகே லாரி மீது மினிவேன் மோதி 2 வாலிபர்கள் பலி
x
தினத்தந்தி 4 Aug 2019 3:45 AM IST (Updated: 3 Aug 2019 8:49 PM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் அருகே லாரி மீது மினிவேன் மோதி 2 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

திருப்பத்தூர், 

திருப்பத்தூரில் உள்ள வேதகாரதெருவை சேர்ந்தவர் திருமுருகன், வேன் டிரைவர். இவர் நேற்று திருப்பத்தூர் பகுதியில் உள்ள இறைச்சி கடைகளுக்கு கோழிகள் வினியோகம் செய்வதற்காக பண்ணைகளில் இருந்து கோழிகளை ஏற்றிக் கொண்டு திருப்பத்தூர் நோக்கி மினிவேனை ஓட்டி வந்தார்.

திருப்பத்தூர் அருகே உள்ள சின்னசமுத்திரம் ஜீவாநகரை சேர்ந்த விஜய் (வயது 26), பள்ளவள்ளி கிருஷ்ணாநகரை சேர்ந்த அருண்குமார் (19), பள்ளவள்ளியை சேர்ந்த சென்னப்பன் ஆகியோர் கூலி தொழிலாளிகளாக மினிவேனில் வந்தனர்.

மினிவேன் திருப்பத்தூரை அடுத்த ஆதிசக்திநகர் அனந்தனேரி ஏரி அருகில் வந்து கொண்டிருந்த போது, முன்னால் சென்ற லாரியை முந்துவதற்கு டிரைவர் திருமுருகன் முயற்சி செய்தார். அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து மினிவேன் லாரியின் பின்புறம் மோதியது. இதில் மினிவேனின் முன்புறம் சுக்குநூறாக நொறுங்கியது.

இந்த விபத்தில் வேனில் இருந்த திருமுருகன், விஜய், அருண்குமார், சென்னப்பன் ஆகிய 4 பேரும் படுகாயம் அடைந்தனர். சிறிது நேரத்தில் விஜய், அருண்குமார் ஆகிய 2 பேரும் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தனர்.

விபத்தை பார்த்ததும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து அவர்களை மீட்க முயற்சி மேற்கொண்டனர். இடிபாடுகளில் சிக்கி இருந்ததால் மீட்பதற்கு சிரமமாக இருந்தது. தகவல் அறிந்ததும் திருப்பத்தூர் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். படுகாயம் அடைந்த சென்னப்பன், திருமுருகன் ஆகிய 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விஜய், அருண்குமார் ஆகிய 2 பேரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து திருப்பத்தூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் மதனலோகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story