வியாபாரி வீட்டில் நகை, பணம் திருட்டு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு


வியாபாரி வீட்டில் நகை, பணம் திருட்டு  மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 4 Aug 2019 4:00 AM IST (Updated: 3 Aug 2019 10:03 PM IST)
t-max-icont-min-icon

வந்தவாசி அருகே மளிகை வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை, வெள்ளி பொருட்கள், ரூ.60 ஆயிரம் ஆகியவற்றை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

வந்தவாசி, 

வந்தவாசி அடுத்துள்ள தெள்ளார் பெரியார் நகரை சேர்ந்தவர் பாண்டியன். இவர் அதே பகுதியில் மளிகை கடை வைத்துள்ளார். கடைக்கு அருகிலேயே இவருக்கு சொந்தமாக 2 வீடுகள் உள்ளன. இவர் வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு கடையையும் ஒரு வீட்டையும் பூட்டி விட்டு மற்றொரு வீட்டில் குடும்பத்தினருடன் படுத்து தூங்கினார்.

நேற்று காலை வழக்கம் போல் சென்று பார்த்த போது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 20 பவுன் நகைகள், ரூ.60 ஆயிரம், வெள்ளி பொருட்கள் ஆகியவை திருட்டு போய் இருப்பது தெரியவந்தது. மேலும் கடையின் பூட்டும் உடைக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த தெள்ளார் போலீசார் விரைந்து சென்று வீடு மற்றும் கடையை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். மேலும் நகைகள், வெள்ளி பொருட்கள், ரொக்கப்பணம் ஆகியவற்றை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Next Story