சென்னை-அரக்கோணம் வழித்தடத்தில் பயண தூரம் அதிகரித்தும் கவுண்ட்டர்களில் கிடைக்காத சீசன் டிக்கெட் பயணிகள் பரிதவிப்பு


சென்னை-அரக்கோணம் வழித்தடத்தில் பயண தூரம் அதிகரித்தும் கவுண்ட்டர்களில் கிடைக்காத சீசன் டிக்கெட் பயணிகள் பரிதவிப்பு
x
தினத்தந்தி 4 Aug 2019 4:00 AM IST (Updated: 3 Aug 2019 11:17 PM IST)
t-max-icont-min-icon

சென்னை-அரக்கோணம் வழித்தடத்தில் பயண தூரம் அதிகரித்தும் சீசன் டிக்கெட் கவுண்ட்டர்களில் கிடைக்காததால் பயணிகள் பரிதவிப்புக்குள்ளானார்கள்.

திருவள்ளூர்,

இந்திய ரெயில்வேயின் விதிகள் படி சீசன் டிக்கெட்டுகள் 150 கி.மீ வரை மட்டுமே கொடுக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சீசன் டிக்கெட் பயண தூரத்தை 150 கி.மீ. இருந்து 160 கி.மீ வரை அதிகப்படுத்த ரெயில்வே மண்டலத்தின் பொது மேலாளர்கள் முடிவு செய்து கொள்ளலாம் என இந்திய ரெயில்வே அதிகாரம் வழங்கியது.

இதையடுத்து தெற்கு ரெயில்வேயில் சென்னை-அரக்கோணம் வழித்தடத்தில் சீசன் டிக்கெட் பயண தூரம் 10 கி.மீ. கூடுதலாக அதிகரித்து 160 கி.மீ. ஆக்கப்பட்டது. இதன் மூலம் சென்னை சென்டிரலில் இருந்து காட்பாடி வழியாக மேலளத்தூர் வரையும், சென்னை எழும்பூரில் இருந்து சென்னை பூங்கா, சென்டிரல் வழியாக குடியாத்தம் வரையும் சீசன் டிக்கெட் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நீட்டிக்கப்பட்ட இந்த சீசன் டிக்கெட்டை உடனடியாக பொதுமக்கள் பெற்று பயன்பெறலாம் என தெற்கு ரெயில்வே நிர்வாகம் அறிவித்தது. இந்தநிலையில் நேற்று சென்னை எழும்பூர் மற்றும் சென்டிரலில் பொதுமக்கள் பயண தூரம் அதிகரிக்கப்பட்டுள்ள சீசன் டிக்கெட் பெறுவதற்காக டிக்கெட் கவுண்ட்டர்களுக்கு சென்றனர். ஆனால் பயண தூரம் அதிகரிக்கப்பட்ட சீசன் டிக்கெட் அங்கு வழங்கப்படவில்லை. இது குறித்து பயணி ஒருவர் கூறியதாவது:-

தெற்கு ரெயில்வேயின் அறிவிப்பை தொடர்ந்து குடியாத்தம் வரை சீசன் டிக்கெட் பெறுவதற்கு வந்தேன். ஆனால் இங்குள்ள அதிகாரிகள் பயண தூரம் அதிகரிக்கப்பட்ட சீசன் டிக்கெட் குறித்து எந்த ஒரு அறிவிப்பும் வரவில்லை என்றும், டிக்கெட் வழங்குவதற்கான மென்பொருளிலும் எந்த மாற்றமும் செய்யவில்லை என்றும் கூறி டிக்கெட் தர மறுத்தனர். இதனால் தற்போதும் நான் சாதாரண டிக்கெட்டில் பயணம் செய்யும் சூழல் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

பயண தூரம் நீட்டிக்கப்பட்ட சீசன் டிக்கெட்டுகள் யூ.டி.எஸ். செயலியில் மட்டுமே தற்போது கிடைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story