புகைப்பிடித்ததை கண்டித்ததால் கல்லூரி மாணவர் தற்கொலை


புகைப்பிடித்ததை கண்டித்ததால் கல்லூரி மாணவர் தற்கொலை
x
தினத்தந்தி 4 Aug 2019 3:15 AM IST (Updated: 4 Aug 2019 2:06 AM IST)
t-max-icont-min-icon

பெரியகுளம் அருகே புகைப்பிடித்ததை கண்டித்ததால் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

தேவதானப்பட்டி, 

இடுக்கி மாவட்டம் வண்டிப்பெரியார் அருகே உள்ள மஞ்சுமலை கிராமத்தை சேர்ந்தவர் கோபிநாத். அவருடைய மகன் சைஜு (வயது 19). இவர், தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகில் உள்ள தனியார் கலைக்கல்லூரியில் பி.காம். 2-ம் ஆண்டு படித்து வந்தார். இதற்காக அவர் கல்லூரி விடுதியில் தங்கியிருந்து படித்து வந்தார். இந்தநிலையில் சைஜுக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு விடுதி அறையில் புகைப்பிடித்து கொண்டிருந்ததை விடுதி கண்காணிப்பாளர் பார்த்துள்ளார். உடனே அந்த மாணவனை விடுதி கண்காணிப்பாளர் கண்டித்துள்ளார். மேலும் பெற்றோரையும் அழைத்து வருமாறு தெரிவித்துள்ளார்.

பெற்றோருக்கு தெரிந்தால் அவமானம் ஆகிவிடும் என கருதி சைஜு தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். இதையடுத்து விடுதியில் உள்ள ஒரு அறையில் நேற்று முன்தினம் இரவு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று காலையில் சைஜு தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருப்பதை கண்டு சக மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் தேவதானப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் சைஜுயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story