அடுத்தடுத்து 2 மோட்டார் சைக்கிள்கள் மீது பஸ் மோதல்: கண்டக்டர் உள்பட 2 பேர் பலி

உத்தமபாளையம் அருகே அடுத்தடுத்து 2 மோட்டார் சைக்கிள்கள் மீது பஸ் மோதியதில் கண்டக்டர் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
உத்தமபாளையம்,
தேனி மாவட்டம் கம்பத்தில் இருந்து நேற்று மதியம் தனியார் பஸ் ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு தேனி நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சை பொன்னம்படுகையை சேர்ந்த முத்து (வயது 29) என்பவர் ஓட்டினார். கம்பம்-தேனி தேசிய நெடுஞ்சாலையில் க.புதுப்பட்டி பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே பஸ் சென்று கொண்டிருந்தது.
அப்போது முன்னால் சென்ற லாரியை பஸ் டிரைவர் முந்த முயன்றார். அந்த வேளையில் எதிரே அடுத்தடுத்து வந்த 2 மோட்டார் சைக்கிள்கள் மீது பஸ் பயங்கரமாக மோதியது. கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் கண்டக்டர் ஆண்டிப்பட்டி தேக்கம்பட்டியை சேர்ந்த விஜயன் (26), பஸ்சின் முன்பக்க கண்ணாடியை உடைத்து கொண்டு முன்னால் விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
மேலும் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த தம்பதியினர் படுகாயம் அடைந்தனர். இதில் சிறிது நேரத்தில் மனைவியின் கண்முன்னே கணவர் பரிதாபமாக இறந்தார். அத்துடன் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த கதிர்வேல் (45) என்பவரும் பலத்த காயம் அடைந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் உத்தமபாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டு வீரபாண்டி தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
பின்னர் விபத்தில் படுகாயம் அடைந்த பெண் உள்பட 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பலியான கண்டக்டர் உள்பட 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தில் படுகாயம் அடைந்த பெண் மற்றும் இறந்த அவருடைய கணவர் குறித்து தகவல் தெரியவில்லை. இதனால் அவர்கள் யார்? என அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளை வைத்து விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் டிரைவர் முத்துவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story






