மயிலாடுதுறையில் பாதாள சாக்கடை குழாய்கள் அடிக்கடி உடைவதால் சாலைகளில் ஏற்படும் பள்ளம்; மக்கள் கடும் அவதி


மயிலாடுதுறையில் பாதாள சாக்கடை குழாய்கள் அடிக்கடி உடைவதால் சாலைகளில் ஏற்படும் பள்ளம்; மக்கள் கடும் அவதி
x
தினத்தந்தி 4 Aug 2019 10:45 PM GMT (Updated: 4 Aug 2019 6:52 PM GMT)

பாதாள சாக்கடை குழாய்கள் அடிக்கடி உடைவதால் சாலைகளில் ஏற்படும் பள்ளத்தினால் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இதற்கு நிரந்தர தீர்வு காணப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மயிலாடுதுறை,

திறந்தவெளி சாக்கடையில் கழிவுநீர் செல்வதால் துர்நாற்றம் வீசுவதுடன், கொசுகள் உற்பத்தியாகி நோய் பரவ வாய்ப்பு உள்ளது. இதை தடுப்பதற்காக மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நாகை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் கடந்த 2003-ம் ஆண்டு பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டது.

மத்தியஅரசின் நிதி ரூ.20 கோடி, மாநிலஅரசின் நிதி ரூ.15 கோடி, மக்களின் பங்களிப்பு நிதி ரூ.7 கோடி என மொத்தம் ரூ.42 கோடி மதிப்பில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த பணி முடிக்கப்பட்டு கடந்த 2009-ம் ஆண்டு செயல்பாட்டிற்கு வந்தது. இதனால் வீடுகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள், விடுதிகளில் இருந்து வரக்கூடிய கழிவுநீர் எல்லாம் பாதாள சாக்கடை குழிக்குள் செல்லும் வகையில் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.

சாலைகளில் பள்ளம்

மயிலாடுதுறை நகரில் சேகரிக்கப்படும் கழிவுநீர், குழாய்கள் வழியாக மன்னம்பந்தல் ஆறுபாதியில்உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. பாதாள சாக்கடை திட்டம் செயல்பாட்டிற்கு வந்த நாள் முதல் ஏதாவது ஒரு தெருவில் திடீரென பள்ளம் ஏற்படுவது தொடர் கதையாக உள்ளது. பாதாள சாக்கடை குழியை மூட பயன்படுத்தப்படும் மூடிகள் அடிக்கடி உடைவதும், பின்னர் அதற்கு பதிலாக வேறு மூடி போடுவதுமாக உள்ளது.

கழிவுநீர் செல்வதற்காக போடப்பட்டுள்ள குழாய்கள் அடிக்கடி உடைவதால் சாலைகளில் பள்ளம் ஏற்படுகிறது. முக்கியமான சாலைகளில் இப்படி திடீர், திடீரென பள்ளம் ஏற்படுவதால் போக்குவரத்து பாதிக்கப்படுவதுடன், மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மயிலாடுதுறையில் கச்சேரி சாலையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே பள்ளம் ஏற்பட்டது. பாதாள சாக்கடை குழாய் உடைந்ததால் மண் உள்வாங்கி பள்ளம் ஏற்பட்டது.

எதிர்பார்ப்பு

பல நாட்களாக இந்த பள்ளம் மூடப்படாமல் திறந்தநிலையில் உள்ளது. இந்த பள்ளத்திற்கு அருகிலும் சாலையில் மண் உள்வாங்கியுள்ளது. பள்ளத்தை மூடி சாலையை சீரமைக்க தாமதமாவதால் இருசக்கர வாகனங்கள், கார்களில் செல்பவர்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதேபோன்று தரங்கைசாலை, கிளை சிறைச்சாலை, அய்யாரப்பர் கீழவீதி போன்ற இடங்களிலும் ஏற்கனவே சாலை உள்வாங்கியுள்ளது.

இப்படி அடிக்கடி ஏதாவது ஒரு இடத்தில் பள்ளம் ஏற்பட்டு வருவதுடன் சில இடங்களில் கழிவுநீர் வெளியேறி கொண்டு இருக்கிறது. கூறைநாடு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே பாதாள சாக்கடை குழி மூடி உடைந்து காணப்படுகிறது. எனவே பள்ளத்தை உடனே சீரமைப்பதுடன், இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். பராமரிப்பு பணியை நகராட்சி நிர்வாகமே ஏற்று செய்ய வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.

சமூக ஆர்வலர்கள் கருத்து

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, பாதாள சாக்கடை திட்டம் தோல்வி அடைந்துவிட்டது. தரமான பொருட்களை கொண்டு பாதாள சாக்கடை திட்ட பணிகள் மேற்கொள்ளப்படாததால் ஆங்காங்கே குழாய்கள் உடைவதால் சாலைகளில் பள்ளம் ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தை மறு ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என பலமுறை கோரிக்கை வைத்துள்ளோம். ஆனால் நகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. ஒவ்வொரு முறையும் குழாய்கள் உடையும்போதும் மண் உள்வாங்கி பெரிய அளவில் பள்ளம் ஏற்படுகிறது. இந்த பள்ளத்தை சரி செய்ய மக்கள் வரிப்பணம் தான் செலவு செய்யப்படுகிறது. ஒவ்வொரு முறையும் இப்படி மக்கள் வரிப்பணம் வீணாவதை ஏற்று கொள்ள முடியவில்லை.

எனவே பாதாள சாக்கடை திட்டத்தை தரமற்ற பொருட்களை கொண்டு நிறைவேற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story