சமயபுரம் கோவிலுக்கு பாதயாத்திரை சென்ற 2 பெண் பக்தர்கள் வாகனம் மோதி சாவு


சமயபுரம் கோவிலுக்கு பாதயாத்திரை சென்ற 2 பெண் பக்தர்கள் வாகனம் மோதி சாவு
x
தினத்தந்தி 5 Aug 2019 3:45 AM IST (Updated: 5 Aug 2019 1:18 AM IST)
t-max-icont-min-icon

விராலிமலை அருகே இருவேறு இடங்களில் சமயபுரம் கோவிலுக்கு பாதயாத்திரை சென்ற 2 பெண்பக்தர்கள் வாகனம் மோதி பரிதாபமாக இறந்தனர்.

விராலிமலை,

திருச்சி மாவட்டம், மருங்காபுரி அருகே உள்ள மேட்டுகாட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்த ரெங்கசாமி மனைவி லெட்சுமி (வயது 45). அதே ஊரை சேர்ந்தவர் சின்னம்மாள் (வயது 47). இருவரும் நேற்று முன்தினம் மாலை தங்களது வீட்டில் இருந்து புறப்பட்டு சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரை சென்றனர். இரவு 9 மணியளவில் திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கொடும்பாளூர் அருகே வந்தபோது, பின்னால் மேக்குடி அருகே உள்ள மேலகுளவாய்பட்டியை சேர்ந்த மகாராஜன் (30) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக லெட்சுமி, சின்னம்மாள் மீது மோதியது. இதில் 3 பேரும் சாலையில் விழுந்து படுகாயமடைந்தனர். இதைபார்த்த அருகில் இருந்தவர்கள் படுகாயமடைந்த லெட்சுமி, சின்னம்மாள், மகாராஜன் ஆகிய 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி லெட்சுமி நேற்று காலை பரிதாபமாக இறந்தார். சின்னம்மாள், மகாராஜன் ஆகியோர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேபோல விராலிமலை அருகே உள்ள பசுமேக்கிப்பட்டி கிராமத்தை சேர்ந்த மூக்கன் மனைவி நாகம்மாள் (வயது 60). இவர் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு நேற்று முன்தினம் இரவு பாதயாத்திரையாக சென்றார். திருச்சி-மதுரை சாலையில் இரவு 10 மணியளவில் விராலிமலை அருகே வாடிகுளம் என்ற இடத்தில் சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் அவர்மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த விராலிமலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நாகம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த இரு விபத்துகள் குறித்து விராலிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுமையா பானு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story