கூடலூர் நகராட்சி பகுதியில், கடைகளில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பு

கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு அதிகரித்து வருவதாக பொதுமக்கள் புகார் கூறி வருகின்றனர்.
கூடலூர்,
தமிழக அரசு கடந்த ஜனவரி மாதம் முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்தது. இதை தொடர்ந்து தேனி மாவட்டத்தில் நகராட்சிகள், ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி பாலீத்தின் பைகள், பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
மேலும் அவற்றை விற்பனை வைத்திருந்த கடை உரிமையாளர்களுக்கு அபராதமும் விதித்தனர். இதனால் கடைகளில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதை தவிர்த்து வந்தனர். இதன் காரணமாக மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு குறைந்து இருந்தது. இதற்கு மாறாக வாழை இலை, தேக்குமர இலை, தாமரை இலை, காகித பை, சணல் பை மற்றும் துணிப்பை பயன்படுத்தினர்.
பொதுமக்கள் ஒத்துழைப்பால் பிளாஸ்டிக் பயன்பாடு தேனிமாவட்டத்தில் 100 சதவீதம் குறைந்துள்ளதாகவும், இதனால் பிளாஸ்டிக் இல்லா தமிழகத்தின் முதல் இடத்தில் தேனி மாவட்டம் உள்ளதாகவும் கடந்த சில மாதங்களுக்கு முன் மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் பொதுமக்களை பாராட்டினார். ஆனால் இவையெல்லாம் ஒரு சில நாட்கள் மட்டுமே நீடித்துள்ளது.
கூடலூர் நகராட்சி பகுதிகளிலும், சுற்றுவட்டார பகுதிகளிலும் பிளாஸ்டிக் பயன்பாடு மீண்டும் அதிகரித்துள்ளது. பெட்டிக்கடைகள், இறைச்சிக்கடைகள், டீ கடைகள், பலசரக்கு கடைகள், ஓட்டல்கள், காய்கறிக்கடைகளில் மீண்டும் தடை செய்யப்பட்ட பாலீத்தின் பைகளை பயன்படுத்த தொடங்கி உள்ளனர். குறிப்பாக டீக்கடைகளில் டீ வாங்குபவர்களுக்கு பாலீத்தின் பையில் ஊற்றி விற்பனை செய்து வருகின்றனர். பாலீத்தின் பை பயன்பாட்டால் சுற்றுச்சூழல் மாசு அடைவதாகவும், உணவு பொருளை சூடாக ஊற்றி தருவதால் நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் பொதுமக்கள் புகார் கூறி வருகின்றனர்.
எனவே கூடலூர் நகராட்சி பகுதியில் உள்ள கடைகளில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story






