தேனி அரசு மருத்துவக்கல்லூரியில், மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்


தேனி அரசு மருத்துவக்கல்லூரியில், மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்
x
தினத்தந்தி 5 Aug 2019 10:30 PM GMT (Updated: 5 Aug 2019 5:02 PM GMT)

தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மருத்துவ தகுதி தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோஷமிட்டனர்.

ஆண்டிப்பட்டி,

தேனி மாவட்டத்தில் க.விலக்கு என்னுமிடத்தில் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவக்கல்லூரி பயிலும் மாணவ-மாணவிகள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து வெளியே வந்தனர். பின்னர் அவர்கள் கல்லூரி நுழைவுவாயில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.

போராட்டத்தின்போது, மருத்துவ படிப்பில் நெக்ஸ்ட் தகுதி தேர்வை புகுத்துவதை மத்திய அரசு கைவிட வேண்டும். தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கக்கூடாது. மருத்துவர்கள் அல்லாத நபர்களை மருத்துவத்துறையில் பணியாற்ற வைக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

அப்போது மருத்துவக்கல்லூரி மாணவர்கள் கூறுகையில், ‘5 ஆண்டுகள் எம்.பி.பி.எஸ். படிக்கும் மாணவர்களுக்கு இறுதி ஆண்டில் நெக்ஸ்ட் என்ற தகுதி தேர்வை எழுத வேண்டும். இந்த தேர்வில் அகில இந்திய அளவில் அனைத்து மருத்துவக்கல்லூரியில் பயிலும் மாணவர்களும் தேர்ச்சி பெற்றால் தான் மருத்துவராக பதிவு செய்ய முடியும். எனவே இந்த தகுதி தேர்வு தேவையற்றது. மருத்துவம் படிக்கும் மாணவர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகும்.

எனவே இந்த தேர்வு நடத்துவதை மத்திய அரசு கைவிடவேண்டும்’ என்றார்.

Next Story