சம்பா சாகுபடிக்கு காவிரி நீரை பெற்று தர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை


சம்பா சாகுபடிக்கு காவிரி நீரை பெற்று தர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 6 Aug 2019 4:00 AM IST (Updated: 5 Aug 2019 11:09 PM IST)
t-max-icont-min-icon

சம்பா சாகுபடிக்கு காவிரி நீரை பெற்று தர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர்,

காவிரி டெல்டா மாவட்டகளான திருவாரூர், நாகை மாவட்டங்கள் திகழ்ந்து வருகின்றன. இதில் குறிப்பாக திருவாரூர் மாவட்டம் உணவு உற்பத்தியில் முதன்மை இடம் பிடித்து வருகிறது. காவிரி நீரையும், பருவ மழையையும் நம்பி தான் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் முப்போகம் விளைந்த பூமியாக இருந்து வந்தது.

ஆனால் கால போக்கில் காவிரி நீர் பிரச்சினை, இயற்கை ஒத்துழைப்பு தராததால் வறட்சி, வெள்ளம் போன்ற பாதிப்புகளால் சாகுபடி பணிகள் பாதிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கர்நாடகாவில் சாகுபடி பரப்பளவு கூடியதால் தண்ணீர் தேவை அதிகரிக்க அதற்கு தேவையான கட்டமைப்புகளை அந்த அரசு உருவாக்கியது. இதனால் தமிழகத்திற்கு தர வேண்டிய காவிரி நீரை கொஞ்சம், கொஞ்சமாக குறைத்தது.

இதனால் ஜூன் 12-ந்தேதி திறக்கப்படும் மேட்டூர் அணை உரிய தண்ணீர் இல்லாததால் காலம் கடந்து திறக்க வேண்டிய சூழ்நிலை உருவானது. இதனால் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டு, அதன் பரப்பளவு குறைந்தது. காலம் கடந்தாலும் குறுவையில் விட்ட சாகுபடியை சம்பாவில் சேர்த்து செய்கின்ற நிலை இருந்து வந்தது. ஆனால் அதுவும் காலப்போக்கில் போதிய தண்ணீர் இல்லாததால் எதிர்பார்த்த அளவு சாகுபடியை மேற்கொள்ள முடியாமல் போனது.

திருவாரூர் மாவட்டத்தில் 36 ஆயிரம் எக்டேர் குறுவை சாகுபடியும், 1 லட்சத்து 50 ஆயிரம் எக்டேர் சம்பா சாகுபடியும் நடைபெற்று வந்தது. இந்த ஆண்டு கர்நாடக அரசு தண்ணீர் தராததால் மேட்டூர் அணையில் தண்ணீர் எந்த ஆண்டும் இல்லாத வகையில் பாதாளத்திற்கு சென்றது. பருவமழையும் பொய்த்து போனதால் ஏரி, குளம் உள்ளிட்ட நீர் நிலைகள் வறண்டு போனது.

இந்த நிலையில் நிலத்தடி நீரை நம்பி பம்பு செட்டுகள் மூலம் குறுவை சாகுபடியை விவசாயிகள் தொடங்கினர். ஆனால் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம் அறிவிக்கப்படவில்லை. கடந்த ஆண்டு 28 ஆயிரத்து 404 எக்டேர் பரப்பளவில் குறுவை சாகுபடி நடைபெற்றது. இந்த ஆண்டு 29 ஆயிரம் ஏக்கர் பரப்பில் குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, தற்போது வரை 23 ஆயிரம் எக்டேர் பரப்பில் சாகுபடி நடைபெற்றுள்ளது.

தி்ருவாரூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடி பரப்பளவு குறைந்து வருகிறது. இதனால் உணவு உற்பத்தி பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. குறுவை சாகுபடி குறைந்துள்ள நிலையில் சம்பா சாகுபடியை முழுமையாக மேற்கொள்ளவும், விவசாயத்தை பாதுகாக்கவும் காவிரி நீரை பெற்று தர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மழை காலங்களில் தண்ணீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்க வேண்டும். அதற்கு போதிய கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story