பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் கடன் தொல்லையில் இருந்து விடுதலை சட்டம் அமல்படுத்தக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் கடன் தொல்லையில் இருந்து விடுதலை சட்டம் அமல்படுத்தக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 6 Aug 2019 4:15 AM IST (Updated: 5 Aug 2019 11:38 PM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் கடன் தொல்லையில் இருந்து விடுதலை சட்டம்- உற்பத்தி பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உத்தரவாதம் செய்யும் சட்டத்தை அமல்படுத்தக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதற்கு மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினார். அப்போது கலெக்டர் அலுவலக வளாகத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பை சேர்ந்த விவசாயிகள் கடன் தொல்லையில் இருந்து விவசாயிகள் விடுதலை சட்டம், விவசாய உற்பத்தி பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை விவசாயிகளுக்கு உத்தரவாதம் செய்யும் சட்டம் ஆகியவற்றை நாட்டில் அமல்படுத்த ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி திடீரென்று சிறிது நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் விவசாயிகள் இது தொடர்பான ஒரு மனுவினை ஜனாதிபதிக்கு, கலெக்டர் மூலம் அனுப்ப மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரனிடம் கொடுத்தனர். அதில், நமது நாட்டு விவசாயிகள் கடுமையான விவசாய நெருக்கடியில் சிக்கி தவிக்கிறார்கள். விவசாய உற்பத்தி செலவுகள் அதிகரித்து வரும் நிலையில் தாங்கள் உற்பத்தி செய்யும் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச கட்டுபடியான விலை கிடைக்காமல் விவசாயிகள் அவதியுறுகின்றனர். இதனால் விவசாய தொழில் நடைமுறை சாத்தியமற்றதாகி, விவசாயிகள் கடன் சுமையில் தள்ளப்பட்டு, விரக்தியில் தற்கொலைக்கு வலுக்கட்டாயமாக தள்ளப்படுகின்றனர். 1995-ம் ஆண்டிற்கு பிறகு 3½ லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். இதுதொடர்பாக அப்போதைய ஜனாதிபதியை பல்வேறு விவசாய சங்கங்களின் தலைவர்கள் சந்தித்த போது, அவர் கடன் தொல்லையில் இருந்து விவசாயிகள் விடுதலை சட்டம், விவசாய உற்பத்தி பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை விவசாயிகளுக்கு உத்திரவாதம் செய்யும் சட்டம் ஆகியவற்றை அமல்படுத்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

இந்த மசோதாக்கள் கடந்த 2017-ம் ஆண்டு ஆயிரக்கணக்கான பங்கேற்ற விவசாயிகள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. மேலும் கடந்த ஆண்டு மக்களவையில், மாநிலங்களவையில் இது தொடர்பாக தனிநபர் மசோதாவாக அறிமுகப்படுத்தப்பட்டது. எனவே இந்த 2 சட்டத்தையும் உடனடியாக மத்திய அரசுக்கு அமல்படுத்துவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இதில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் ராஜாசிதம்பரம், மாவட்ட தலைவர் செல்லதுரை, மாவட்ட செயலாளர் ஞானசேகரன், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் ராஜேந்திரன் உள்பட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு சார்பில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைப்பதற்காக நிலம் கொடுத்த உரிமையாளர்கள் கொடுத்த மனுவில், வேலை வாய்ப்பு ஏற்படுத்துவதற்காக பெரம்பலூர் மாவட்டத்தில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைப்பதற்காக தமிழக அரசு, தனியார் நிறுவனம் மூலம் விவசாய நிலங்களை ஒரு ஏக்கருக்கு லட்ச கணக்கில் ரூபாய் கொடுத்து வாங்கினார்கள். நிலம் கொடுத்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு வேலை தருவதாகவும், வீடு கட்டுவதற்கு காலிமனை தருவதாகவும் கூறினார்கள். ஆனால் சுமார் 2,900 ஏக்கர் விவசாய நிலங்களை பெற்று கொண்ட அந்த தனியார் நிறுவனம் எந்தவித தொழிற்சாலைகளையும் இதுவரை உருவாக்கவில்லை. சுமார் 12 ஆண்டுகளுக்கு மேல் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்கப்படாததால் நிலம் கொடுத்த விவசாயிகள் வாழ்வாதாரம் இன்றி தவிக்கிறார்கள். இதனால் அந்த தனியார் நிறுவனத்திற்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும். மேலும் அந்த நிறுவனத்திற்கு பதிலாக தமிழக அரசு, வேறு ஒரு நிறுவனத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து விரைந்து சிறப்பு பொருளாதார மண்டலத்தை அமைத்து வேலை வாய்ப்பு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

குன்னம் தாலுகா பெருமத்தூர் அருகே உள்ள பி.நல்லூர் கிராம மக்கள் மாவட்ட வருவாய் அதிகாரியிடம் கொடுத்த மனுவில், எங்கள் கிராமத்தில் தற்போது நிலவும் குடிநீர் பிரச்சினையை தீர்க்கவும், கிராமத்தில் தற்போது அமைக்கப்பட்டு வரும் தார்ச்சாலையில் இருபுறங்களிலும் கழிவுநீர் செல்வதற்கு கால்வாய்கள் அமைக்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

ஆம் ஆத்மி கட்சியின் மாவட்ட தலைவர் முகம்மது இக்பால் கொடுத்த மனுவில், திருமாந்துறை கைகாட்டி பகுதியில் கழிவுநீர் வெளியேறி துர்நாற்றம் வீசுவதோடு, தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. இது தொடர்பாக பலமுறை மனு கொடுத்தும் அதிகாரிகள் கழிவுநீர் வெளியேறுவதை தடுக்க நடவடிக்கை எடுத்தபாடில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு கழிவுநீர் வெளியேறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

ஆலத்தூர் நடுத்தெருவை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், எங்கள் தெருவில் சிலர் அரசு நத்தம் பொதுப்பாதையை ஆக்கிரமித்து உள்ளனர். இது தொடர்பாக அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று கூறியிருந்தனர். வேப்பந்தட்டை தாலுகா அன்னமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட விசுவக்குடி கிராம மக்கள் கொடுத்த மனுவில், அன்னமங்கலம் ஊராட்சியில் விசுவக்குடி, முகமது பட்டினம், பிள்ளையார் பாளையம், அரசலூர், ஈச்சங்காடு உள்ளிட்ட 7 கிராமங்கள் உள்ளது. ஆனால் கிராம சபை கூட்டம் அன்னமங்கலத்தில் மட்டும் தான் தொடர்ந்து நடைபெறுகிறது. எனவே வருகிற சுதந்திர தினத்தன்று விசுவக்குடி கிராமத்தில் கிராம சபை கூட்டம் நடத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

இதேபோல் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மொத்தம் 253 மனுக்களை மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன் பெற்றுக்கொண்டார். அந்த மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் விவரங்களை கேட்டறிந்து குறித்த காலத்திற்குள், தக்க நடவடிக்கை மேற்கொண்டு, மனுதாரருக்கு உரிய பதிலை அளிக்குமாறு வருவாய் அதிகாரி அலுவலர்களை அறிவுறுத்தினார். கூட்டத்தில் மகளிர் திட்ட இயக்குனர் தேவநாதன் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story