பள்ளி ஆசிரியர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துபவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க கோரி மனு: மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அளித்தனர்


பள்ளி ஆசிரியர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துபவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க கோரி மனு: மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அளித்தனர்
x
தினத்தந்தி 6 Aug 2019 4:00 AM IST (Updated: 6 Aug 2019 12:41 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வாழைக்குறிச்சி பள்ளி ஆசிரியர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் மனு அளித்தனர்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அதிகாரி சாந்தி தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். அப்போது பட்டா மாறுதல் உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய சுமார் 423 மனுக்கள் பெறப்பட்டது. கூட்டத்தில் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

விராலிமலையில் உள்ள தனியார் கல்லூரியில் பயிலும் 2-ம் ஆண்டு மற்றும் 3-ம் ஆண்டு மாணவர்கள் கொடுத்த மனுவில், நாங்கள் விராலிமலையில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறோம். நாங்கள் கடந்த ஆண்டு நேரடியாக 2-ம் ஆண்டு மற்றும் முதலாம் ஆண்டில் சேர்ந்தபோது கல்லூரி நிர்வாகம் எங்களிடம் எந்த பணமும் நீங்கள் கட்ட தேவையில்லை எனக் கூறி எங்களை கல்லூரியில் சேர்த்து கொண்டனர்.

இந்நிலையில் இந்த ஆண்டு கல்லூரி நிர்வாகம் உங்களுக்கு இதுவரையிலும் அரசு வழங்கி கொண்டிருந்த நிதி உதவியை நிறுத்தி உள்ளது. எனவே நீங்கள் பணம் கட்ட வேண்டும் எனக் கூறினார்கள். எங்கள் குடும்பத்தின் ஏழ்மை காரணமாக எங்களால் கல்லூரி நிர்வாகத்திற்கு பணத்தை செலுத்த முடியவில்லை. இதனால் எங்கள் படிப்பு பாதியிலேயே நிற்கும் நிலை உள்ளது. எனவே இதுகுறித்து கலெக்டர் நடவடிக்கை எடுத்து எங்களது படிப்பை மீண்டும் தொடர உதவ வேண்டும் என கூறியிருந்தனர்.

கூட்டத்தில் பொன்னமராவதி தாலுகா வாழைக்குறிச்சி ஊர்பொதுமக்கள் கொடுத்த மனுவில், எங்கள் ஊரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 70 மாணவர்கள் பயின்று வருகின்றனர். 6 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். பள்ளியில் நடைபெற்று வரும் விழாக்கள் அனைத்தும் எங்களுக்கும் தெரிந்தும், எங்களது ஆலோசனைப்படியும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் பள்ளியின் மீது களங்கம் ஏற்படுத்தும் வகையில் சிலர் சுவரொட்டிகள் மற்றும் துண்டுபிரசுரங்களை அடித்து பொய் பிரசாரம் செய்து வருகின்றனர். மேலும் பெரியார் அம்பேத்கர் மக்கள் கழகம் என்ற பெயரில் எங்கள் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு எதிராக வருகிற 9-ந் தேதி புதுக்கோட்டை சின்னப்பா பூங்காவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்து உள்ளனர். எனவே இந்த ஆர்ப்பாட்டத்தை தடுத்து நிறுத்தி, ஆர்ப்பாட்டம் நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறியிருந்தனர்.

கூட்டத்தில் பெருஞ்சுனை அம்மன்நகர் பகுதியை சேர்ந்த நாகராஜன் என்பவர் கொடுத்த மனுவில், நான் கருங்கல் பட்டறைக்கு வழங்கும் மின் வினியோகத்தை நிறுத்தி, பட்டறையை அகற்றக்கோரி பலமறை மனு கொடுத்தும், இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து, புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக வளாகத்தில் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து உள்ளேன். நான் எந்தநிலையில் இறந்தாலும் மாவட்ட நிர்வாகம்தான் பொறுப்பு. எனது உடலை மருத்துவ கல்லூரி மாணவர்கள் ஆராய்ச்சிக்காக கொடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

கூட்டத்தில் பி.எஸ்.என்.எல். ஒப்பந்த ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கொடுத்த மனுவில், எங்களுக்கு பி.எஸ்.என்.எல். நிர்வாகம் 5 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை. அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் சுமார் 45 வயது முதல் 50 வயது வரை உள்ளது. இதனால் அவர்களால் வேறு வேலைக்கு செல்ல முடியாது. இதனால் எங்கள் குழந்தைகள் கல்வியை தொடர முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே கலெக்டர் நடவடிக்கை எடுத்து எங்களுக்கு சம்பளம் பெற்றுத்தர வேண்டும் என கூறியிருந்தனர்.

திருமயம் கல்லூர் சுதந்திரபுரத்தில் உள்ள தனியார் ஐ.டி.ஐ. மாணவர்கள் கொடுத்த மனுவில், கடந்த 30-ந் தேதி முதல் அனைத்து ஐ.டி.ஐ.க்களிலும் தேர்வு நடைபெற்று வருகிறது. ஆனால் நாங்கள் படிக்கும் தனியார் ஐ.டி.ஐ.யில் மட்டும் தேர்வு நடைபெறவில்லை. எங்களுக்கு ஹால் டிக்கெட் தருவதற்காக ரூ.2 ஆயிரம் ஐ.டி.ஐ. நிர்வாகம் வாங்கிக் கொண்டது. நாங்கள் 30-ந் தேதி தேர்வு எழுதுவதற்காக அனைவரும் கல்லூரி வந்து விட்டோம். ஆனால் ஆசிரியர்கள் யாரும் வரவில்லை. தேர்வும் நடத்தப் படவில்லை. ஹால் டிக்கெட்டும் எங்களுக்கு வழங்கப்படவில்லை. இதுவரை அனைத்து கல்விக் கட்டணத்தையும் செலுத்தி உள்ளோம். தேர்வு நடைபெறாததால் எங்களுடைய படிப்பு பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே தனியார் ஐ.டி.ஐ.யை கலெக்டர் ஆய்வு செய்து, நாங்கள் தேர்வு எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

அறந்தாங்கி சுகாதார மாவட்ட பிரசவ உதவியாளர்கள் கொடுத்த மனுவில், அறந்தாங்கி சுகாதார மாவட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 2006 முதல் பிரசவ உதவியாளராக நியமிக்கப்பட்டு ரூ.1,500 சம்பளமாக பெற்று வருகிறோம். எங்களை பணி நிரந்தரம் செய்வதாக கூறி பலமுறை எங்களிடம் இருந்து சான்றிதழ்கள், விவரங்கள் அனைத்தும் பெற்று அனுப்பி வைத்தார்கள். ஆனால் இதுவரை எந்த தகவலும் இன்றி மாதம் ரூ.1,500 சம்பளம் வழங்கி வருகின்றனர். எங்களின் குடும்ப சூழ்நிலை கருதி எங்கள் அனைவரையும் பணிநிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

Next Story